உலகின் பல நாடுகளிலுள்ள முன்னாள் நீதியரசர்கள், முன்னணி சட்ட வல்லுநர்கள், சட்டத்துறை பேராசிரியர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் உறுப்பினர்களாக இருக்கும் பன்னாட்டு சட்டவாளர்கள் ஆணையம் (ஐ சி ஜே), இலங்கையின் தீவிரவாத சித்தாந்தங்களிலிருந்து விடுபடும் ஒழுங்கு விதிகளை
கடுமையாக கண்டித்துள்ளனர்.
மிகவும் கொடூரமான இந்த ஒழுங்குவிதிகள் வகைதொகையின்றி நிர்வாக ரீதியாக வழக்கு விசாரணையின்றி மக்களைத் தடுத்து வைக்க வழி செய்கிறது.
இந்த ஒழுங்குவிதிகள் நாட்டிலுள்ள சிறுபான்மையினரைச் சமமற்ற வகையில் இலக்கு வைக்கக் கூடும்
என்று ஐ சி ஜே எச்சரித்துள்ளது.
இந்த நிர்வாக ஒழுங்குவிதிகளை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ வர்த்தமானி ஒன்றின் மூலம் இம்மாதம் 12 ஆம் திகதி பிரகடனப்படுத்தினார். இந்த ஒழுங்குவிதிகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அதன் ஒப்புதலைப் பெறாமலேயே ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மிகவும் சர்ச்சைக்குரிய இந்த வர்த்தமானி அறிவிப்பின் மூலம் சந்தேகத்திற்குரிய நபர்களின் பேச்சு அல்லது சைகைகள் மத, இன அல்லது சமூக நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையில்
இருப்பதாகவோ அல்லது ’’வெறுப்புணர்வை தூண்டி சமூக இனக்கப்பாட்டிற்கு குந்தகம் விளைவிப்பதாகவோகருதப்பட்டால், அவர்களைப்
புனர்வாழ்வுக்குஅனுப்பும் வகையில் இரண்டு ஆண்டுகளுக்கு வழக்கு விசாரணையின்றி
மீள் ஒருங்கிணைப்பு மையங்களில்தடுத்து வைக்க முடியும்.
நிறைவேற்று அதிகாரம் மூலம் வெளியிடப்பட்டுள்ளஇந்த ஒழுங்கு விதிகள், வழக்கு விசாரணையின்றி தடுத்து வைக்க வழி செய்கிறது.
இது இலங்கையின் சொந்த அரசியல் யாப்பில் 13ஆவது ஷரத்தின் கீழ் அளிக்கப்பட்டுள்ள அரசியல் சாசனப் பாதுகாப்பை மீறுவதோடின்றி, பன்னாட்டு சட்ட வழிமுறைகள் மற்றும் கடப்பாடுகளை மீறும் செயலாகும் என்று ஐ சி ஜேயின் சட்டம் மற்றும் கொள்கைக்கான இயக்குநர் இயன் சீடர்மேன் கூறியுள்ளார். ஆனாலும் இந்த ஒழுங்குமுறையை விமர்சிப்பார்கள், இது போர்க் காலத்தில் நிலவிய அட்டூழியங்களை நினைவுபடுத்துகின்றன என்று கூறுகின்றனர். அந்த சமயத்தில் வகைதொகையின்றி, காரண காரியமற்று, எவ்விதமான முகாந்திரமும் இல்லாமல் தமிழ் மக்கள் நாடு முழுவதும் கைது செய்யப்பட்டு விசாரணையின்றி பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டனர் என்று மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஐ சி ஜே, இதர கண்காணிப்பு அமைப்புகள்மற்றும் ஐ நா ஆகியவற்றின் அறிக்கைகள் போருக்கு பின்னர் தமிழ்ப் போராளிகளுக்கு அளிக்கப்பட்ட புனர்வாழ்வு திட்டங்கள் சர்வதேச அளவுகோல்களை எட்டவில்லை அவை என்றும் சித்திரவதைக்கு வழிவகுத்திருக்கலாம் என்று கூறுகின்றன. ஆனால் இலங்கை அரசோ சர்ச்சைக்குரிய அந்தத் திட்டத்தை `உலகத் தரம் வாய்ந்த மறுவாழ்வு திட்டம்` என்று கூறுகிறது. இப்போதும் கூட இலங்கையின் மிகவும் கொடூரமான பூசா, மகசின், மஹர மற்றும் அனுராதபுரம் போன்ற சிறைச்சாலைகளில் நூற்றுக் கணக்கான தமிழ் மற்றும் முஸ்லிம்கள் பாதுகப்பாபு அச்சத்திற்கு இடையே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தீவிரவாத சிந்தனையிலிருந்து மீள்வதற்காககொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய ஒழுங்குமுறை விதிகள் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை இலக்கு வைத்தே கொண்டுவரப்பட்டுள்ளது என்று மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர். அதே நேரம்
நஞ்சைக் கக்கிதொடர்ச்சியாக
மதத் துவேஷத்தைவெளிப்படுத்தி சமூக நல்லுறவை பாதிக்கும் வகையில் பேசும் பௌத்த அரசியல்வாதிகள் மற்றும் பிக்குமார்கள் தொடர்ந்து சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படுகின்றனர் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். மனித உரிமைகள் மற்றும் அரசியல் உரிமைகள் குறித்த பன்னாட்டு உடன்படிக்கையின் 9வது ஷரத்தின்படி தனி நபரின் சுதந்திரம் பேணப்படுவதற்கு அளிக்கப்பட்டிருக்கும் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஐ சி ஜே சுட்டிக்காட்டுகிறது.
அந்த உடன்படிக்கைக்கு இலங்கையும் ஒரு பங்குதாரராக இருப்பதால் அந்த உரிமையைப் பாதுகாக்கும் கடப்பாடு இலங்கைக்கு உள்ளது என்றும், ஆனால் இந்தப் புதிய ஒழுங்குமுறை விதிகளில் தனி நபர் சுதந்திரம் குறித்த பல அம்சங்கள் காணப்படவில்லை என்று அந்த பன்னாட்டு அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
நிர்வாக அதிகாரங்களைப் பயன்படுத்தி இப்போது கொண்டுவரப்பட்டுள்ள ஒழுங்குமுறை விதிகள் அனுமதிக்கப்பட்டவை அல்லஎன்று ஐ நா மனித உரிமைகள் ஆணையம் தொடர்ந்து கூறி வந்துள்ளது.
இந்த ஒழுங்குமுறை விதிகளைப் பிரகடனப்படுத்துவதற்கு முன்னர் பயங்கரவாதத் தடை சட்டத்தைப் பயன்படுத்தி சிறுபான்மையின மக்களை அதிகாரிகள் துன்புறுத்தி வந்தனர், எனினும் இது தொடர்பில் மிகக் குறைந்த நடவடிக்கை அல்லது முற்றாக நடவடிக்கை எடுக்கப்படாத சூழலே இலங்கையில் நிலவுகிறது என்று ஐ சி ஜே கூறியுள்ளது.
சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையை முன்னெடுப்பவர்கள் மீது எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை என்றும் அந்தப் பன்னாட்டு அமைப்பு கூறுகிறது.
இந்தப் புதிய ஒழங்குமுறை விதிகள் தடுத்து வைக்கப்படும் நபர்களும் பேரம் பேச பயன்படும்என்கிறார் ஐ சி ஜேயின் இயன் சீடர்மேன். அதாவது தடுத்து வைக்கப்படும் நபர் காலவரையின்றி தடுத்து வைக்கப்பட விரும்புகிறாரா அல்லது இரண்டு ஆண்டுகள்
புனர்வாழ்வு` மையத்தில் செலவிட விரும்புகிறாரா எனக் கேட்டு அவர்களை அச்சுறுத்தி பணிய வைக்க அரசு முனையக் கூடும் என்றும் அவர் கூறுகிறார்.
உண்மையான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நியாயமான வழியில் வழக்கு முன்னெடுக்கப்பட்டு சட்டம் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் நீதி வழங்குவதே
மக்கள் நலனில் செயல்படுவதாகக்` கூறும் ஒரு அரசு செய்ய வேண்டிய செயல் என்று பல்துறையைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்துகின்றனர்.