ஜேர்மனியின் அதிபர் அஞ்சேலா மெர்கலின் கிறீஸ்தவ ஜனநாயகக் கட்சியைச்(CDU) சேர்ந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் கரின் ஸ்ட்ரென்ஸ் (Karin Strenz) விமானத்தில் பயணம் செய்து கொண்டிந்த சமயம் நடுவழியில் உயிரிழந்தார் என்று அறிவிக்கப்படுகிறது.
53 வயதான ஸ்ட்ரென்ஸ் தனது கணவ ருடன் கியூபாவில் இருந்து ஜேர்மனியின் பிராங்க்பேர்ட் விமான நிலையம் நோக்கிவந்து கொண்டிருந்த சமயம் இடைவழி யில் விமானத்தினுள் மயங்கி வீழ்ந்தார்என்று கூறப்படுகிறது.
அவர் பயணித்த ‘கொண்டோர் எயார்(Condor flight DE-199) விமானம் உடனடி யாக அயர்லாந்தின் ஷானன் (Shannon) விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. அவசர முதலுதவிப் பிரிவினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் அவர் அங்கு உயிரிழந்துவிட்டார் என அறிவிக்கப்பட் டது.
அவரது மரணத்துக்கான காரணமும் அவர் எதற்காகக் கியூபா சென்றிருந்தார் என்பதும் தெரியவரவில்லை. 2009 முதல் ஜேர்மனியின் Bundestag எனப்படும் சமஷ்டி நாடாளுமன்றத்தின் பிரதிநிதியாக விளங்கி வருகின்ற கரின் ஸ்ட்ரென்ஸ், அஞ்சேலா மெர்கலின் கட்சிக்கு மிக நெருக்கமானவர் ஆவார்.
அஸர்பைஜான் நாட்டில் இருந்து பெற்ற அன்பளிப்பு நிதிக்குக் கணக்கு காட்டத் தவறினார் எனக் கூறப்படுகின்ற ஒரு குற்றச்சாட்டில் அண்மையில் அவருக்கு நீதிமன்றம் ஒன்றில் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.
கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் அதிபர் அஞ்சேலா மெக்ரலின் கட்சி அடுத்தடுத்து இழப்புகளைச் சந்தித்து வருகிறது. முக்கிய அமைச்சர்கள் மாஸ்க் கொள்வனவு ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காகி உள்ளனர். கடைசியாக சுகாதார அமைச்சரும் அதில் சிக்கி உள்ளார். இந்த நிலையிலேயே மெர்கல் அம்மையாரின் சகாவான பெண் உறுப்பினர் திடீரென உயிரிழந்துள்ளார்.
(படம் :அங்கெலா மெர்கலுடன் கரின் ஸ்ட்ரென்ஸ்) #அஞ்சேலாமெர்கல் #விமானப்பயணத்தில் #உயிரிழப்பு #ஜேர்மனி #Karin_Strenz
——————————————————————–
குமாரதாஸன். பாரிஸ்.22-03-2021