வன்னிப் பிரதேசமானது ஈழ நாட்டில் வடகீழ் பாகத்தில் பரந்த நீண்டதொரு சுமார் 2000 சதுரமைல்உடைய பிரதேசமாகவும், தமிழனின் வரலாற்றுக் கலை, கலாசாரம், பண்பாடுகளையும் தன்னகத்தே கொண்டு விளங்குகின்றது. வன்னிநாடு தனது எல்லைகளாக கிழக்கே திருகோணமலையையும், வடக்கே யாழ்ப்பாண பரவைக் கடலையும், தெற்கே அருவி ஆற்றையும், மேற்கே மன்னார் மாவட்டத்தையும் கொண்டமைந்துள்ளது. இப்பிரதேசத்தை வன்னியர்கள் ஆண்டமையினால் வன்னிநாடு என அழைக்கப்பட்டது.
‘எல்லை வடக்கில் எழில் யாழ் பரவு கடல்
பல்லோர் புகழருவி தெற்கெல்லை – நல்ல திருக்
கோணமலை கீழ்பால் கேதீச்சர மேற்கு
மாணத் திகழ்வன்னி நாடு’
வன்னி வளநாடு வயல்களும்,குளங்களும் நிறைந்தது. வன்னியில் செந்நெல்லும், கருநெல்லும் தீம்பலாவும்,தேமாவும், தேக்கும் மலிந்து கிடக்கின்றன. வீரமிக்க இவ்வன்னிநாடு அஞ்சா நெஞ்சம் படைத்த அருந்தமிழ் மன்னர் அரசாண்ட நாடு. வற்றாத வளம் கொழிக்கும் வன்னி நாட்டின் வளங்களைக் கண்டு அவற்றைக் கவர்ந்து செல்வதற்கு பயம்காட்டி திறை வேண்டும் என்று செப்பிய போதும் அந்நியருக்கு அடிபணியாது இறுதி மூச்சுவரை போராடி வீரமரணம் எய்திய பண்டாரவன்னியன் என்ற தமிழ் மன்னன் ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசமாகும். ‘வன்னிநாடு’ என்ற பெயர் ஏற்படுவதற்கு முன்னர் ‘அடங்காப்பற்று’ என்னும் பெயரைப் பெற்றிருந்தது. அடங்காப்பற்று வன்னியர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன் ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. பனங்காமப்பற்று, கரிக்காட்டு மூலைப்பற்று, கருநாவல்பற்று, மேல்பற்று, முள்ளியவளைப்பற்று, தென்னமரவடிப்பற்று என்பனவாகும்.
‘அடங்காப்பற்று’என்ற பெயரை வன்னிநாடு பெற்றமைக்கான காரணம், இப்பகுதி மன்னனும் மக்களும் வடக்கே யாழ்ப்பாண மன்னருக்கோ, தெற்கே அனுராதபுர அரசருக்கோ அடிபணியாது செங்கோல் ஆட்சி புரிந்தமையால் ஆகும். வன்னியர்களை பற்றி இதுவரை கிடைத்துள்ள வரலாற்று மூலங்களில் 1722 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ‘கயிலை வன்னியனார் மடதர்மசாதனப் பட்டயம்’ என்பது மட்டுமே சான்றாகும்.
வன்னிப் பிரதேசமானது மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களை தன்னகத்தே கொண்டு அமைந்துள்ளது. இம்மூன்று மாவட்டங்களையும் ஒன்றாகச் சேர்த்து வன்னித் தேர்தல் தொகுதி அமைந்துள்ளது. இம்மூன்று மாவட்டங்களிலும் வளங் கொழிக்கின்ற மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் விளங்குகின்றது. காடுகளும், வயல்களும், குளங்களும், குடியிருப்புகளும் முல்லைத்தீவு மக்களின் வாழ்க்கையையும் வயல் வளத் தினதும் கருப்பொருட்களே முல்லைத்தீவு பண்பாட்டை தீர்மானிக்கின்றது.
‘வன்னி நாடு வளர் சோலை நாடு
வரியம் மூன்று விளைவுள்ள நாடு
கன்னி நாடு கதிர்சோலை நாடு
காரளார் வாழும் கன்னியர் நாடு’
என்ற பாடலடி வன்னியின் முல்லைத்தீவு மாவட்டத்தின் சிறப்புகளை எடுத்து இயம்புகின்றது. தமிழர்களின் வீரத்தினை உலகிற்கு பறைசாற்றிய வீரமானவர்கள் வாழ்ந்த முல்லைத்தீவு மண்ணானது முன்னைய வவுனியா மாவட்டத்தின் ஏறக்குறைய அரைவாசியினையும், யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளையும் இணைத்து 1106 சதுர மைல் பரப்பளவையும், கொக்கிளாயில் இருந்து கேப்பாரம்பிட்டி வரையான நாற்பது மைல் நீளமான கடற்கரையினையும் கொண்டமைந்துள்ளது. அதிக நீளம் கொண்ட கடற்கரைப்பகுதி இருப்பதனால் மீன்பிடித் தொழில் சிறந்து காணப்படுகின்றது.
கடற்கரையை அண்டி மணல் பிரதேசமும் பின்பு கரையில் இருந்து உள்ளே செல்லச் செல்ல இருவாட்டி மண், களிமண், செம்மண் என்பனவும் கருங்கல் பாறைகளும் அதிகளவு தட்டையான பகுதிகளையும் கொண்டு சூரியன் ஆறு, பறஸ்தி ஆறு, பேராறு போன்ற ஆறுகளையும் இருபதிற்கும் மேற்பட்ட குளங்களையும், நூற்று ஐம்பதிற்கும் மேற்பட்ட சிறிய நீர்ப்பாசனக் குளங்களையும் கொண்டு விவசாயத்திற்கு வளம் சேர்க்கும் இம்முல்லைத்தீவு மாவட்டம் 1978 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
ரதிகலா புவனேந்திரன் நுண்கலைத்துறை கிழக்குப் பல்கலைக்கழகம்.