பெற்ற தாய் என்றும் பாராமல் பட்டினி போட்டு, அடித்துத் துன்புறுத்திய மகனுக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 56 வார சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான ஏன்டி கோ ஜு ஹுவா (Andy Koh Ju Hua) என்ற அந்த 30 வயது நபர், தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளாா்
தன் தாயை குளிக்கவோ, உரக்கப் பேசவோ, நல்ல ஆடைகளை அணியவோ அந்த மகன் அனுமதிக்கவில்லை என்பதும் முரட்டுத்தனமாக தன் தாயை தாக்கியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தேசிய பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பு மேற்கொண்டபோது, தனது தாயை ஏன்டி கோ ஜு ஹுவா கொடுமைப்படுத்த தொடங்கியுள்ளார்
பெற்ற தாயை மோசமாக நடத்தியதுடன் மன ரீதியிலும் வேதனைப்படுத்தி உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவருக்கு இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, வழக்கு விசாரணையின்போது தமது குற்றத்தை ஒப்புக்கொண்ட ஏன்டி, தண்டனையைக் குறைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், தமது குற்றச்சம்பவங்கள் தொடர்பான சில தகவல்களை அவர் மறுத்துள்ளதுடன் இத்தகைய அறிவற்ற செயலில் தான் ஈடுபட்டதற்கான காரணம் தனக்கே புரிபடவில்லை எனத் தொிவித்துள்ளாா். மேலும், தமக்கு மனநலப் பிரச்னை இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஏன்டி கோ தற்போது தேசிய பல்கலைக்கழகத்தில் படிக்கவில்லை எனத் தொிவித்துள்ள பல்கலை நிர்வாகம் 2019ஆம் ஆண்டில் விடுப்பு எடுத்த அவர், பின்னர் படிப்பைத் தொடர பல்கலைக்கழகத்துக்கு திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மார்ச் 23ஆம் திகதி நடைபெற்ற விசாரணையின் முடிவில் ஏன்டி கோவுக்கு 56 வாரங்கள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
“நான் ஏன் இத்தகைய அறிவற்ற செயல்களில் ஈடுபட்டேன் என்று தெரியவில்லை. நான் என் படிப்பை தொடர விரும்புகிறேன். என் தாயுடன் மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறேன். மேலும் மீதமுள்ள நாட்களில் அவரை நன்கு கவனித்துக் கொள்ளவும் ஆசைப்படுகிறேன்,” என ஏன்டி கோ. கூறியுள்ளாா். #தாய் #பட்டினி #சிங்கப்பூர் #சிறை
மூலம் பிபிசி தமிழ்