“தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும்.” என பிரபல தென்னிந்திய நடிகை ஷகிலா தெரிவித்துள்ளார்.
அண்மையில் தமிழக காங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகை ஷகிலாவுக்கு, கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில் சினிமாவை கடந்து அரசியலில் கால் பதித்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று (26.03.21) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போது,
“பெண்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே நான் அரசியலுக்கு வந்து இருக்கிறேன். நடிகை என்பதற்கு அப்பால் ஒரு தனி அடையாளம், தனி அதிகாரம் பெற விரும்புகிறேன். நல்லது செய்ய வேண்டும் என்றாலும் கூட ஒரு ‘பவர்’ வேண்டும்.”
“காங்கிரசில் இருந்து குஷ்பு விலகியதால், அந்த இடத்தை நிரப்புவதற்காக நான் வந்துள்ளேனா? என்று கேட்கிறார்கள். நிச்சயமாக இல்லை. குஷ்புவுடன் என்னை ஒப்பிட வேண்டாம். எனக்கு அவர் சீனியர். காங்கிரசில் நான் இணைந்தது போல, இந்த கட்சியில் இருந்து அவர் விலகிச் சென்றதற்கும் ஒரு காரணம் இருக்கும்.”
“கட்சித் தலைமை அனுமதி அளிக்கும் பட்சத்தில் நிச்சயம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவேன். அரசியல் ஒருபுறம் இருந்தாலும் எனது சினிமா பயணம் தொடரும்.”
”சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்துள்ளீர்கள். உங்களது அடுத்த கட்ட நகர்வுகள் எப்படி இருக்கும்,”, என்று ஊடகவியலாளர்கள் ஷகிலாவிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அதற்கு, “ஏன்… இப்பவே இத்தனை கேள்வி கேக்குறீங்க… அரசியலுக்கு இப்போதான் வந்திருக்கேன். கொஞ்சம் கொஞ்சமா பல விஷயங்களை கத்துக்கிட்டு இருக்கேன். இனி என் ஆட்டத்தை போகப்போக பார்ப்பீங்க, என சிரித்தபடி கூறியுள்ளார்.