300kg ஹெரோயின் மற்றும் ஆயுதங்களுடன் இலங்கை படகு ஒன்று இந்திய கடல் எல்லையில் கைப்பற்றப்பட்டு உள்ளதாக இந்திய கடலோர பாதுகாப்பு பிரிவு அறிவித்துள்ளது.
300 கிலோ ஹெரோயினுடனும் ஆயுதங்கள் சிலவற்றுடனும் இலங்கையில் பதிவுச் செய்யப்பட்ட மீனவ படகு ஒன்றில் இருந்த 6 இலங்கையர்கள் இந்திய கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரள கடற்பகுதியில் வைத்தே இந்த படகும், படகில் இருந்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய போதை பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளளது.
´ரவி ஹங்ஸி´ என்ற குறித்த மீனவ படகில் இருந்து 300 கிலோ 323 கிராம் பெறுமதியான ஹெரோயின் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன் ஏ.கே.47 ரக 5 துப்பாக்கிகளும், 9 மில்லிமீட்டர் நீளமான 1000 துப்பாக்கி ரவைகளும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.
அந்த படகில் இருந்து போலி ஆவணங்கள் சிலவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கைதான 6 இலங்கை மீனவர்களும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட ஹெரோயின் தொகை ஈரானில் இருந்து கொண்டுவரப்பட்டு குறித்த மீனவ படகில் உள்ளவர்களிடம் கையளிக்கப்பட்டிருக்கலாம் என இந்திய அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.