ஏப்ரலில் தடுப்பூசி முயற்சிகள் வெற்றி அளித்தால் உணவகங்கள், அருந்தகங் கள், சினிமா போன்றவற்றை மே மாத நடுப்பகுதியில் இருந்து படிப்படியாகத் திறக்க முடியும். அதிபர் எமானுவல் மக்ரோன் தனது தொலைக்காட்சி உரையில் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டார்.
அவரது கூற்றுப்படி இவை அனைத்தும் ஒரே திகதியில் திறக்கப்படும் என்று அர்த்தம் அல்ல. பொழுதுபோக்கு இடங்கள், உணவகங்களின் வெளி இருக்கைகள் (terraces) என்பவற்றை அந்தத் திகதியில் இருந்து வாடிக்கையா ளர்களுக்கு அனுமதிக்க முடியும் என்பதாகும். பிரான்ஸில் தொற்று நோய் அனர்த்தம் ஆரம்பித்த பின்னர் நாட்டுமக்களுக்கு அதிபர் வழங்கும் ஏழாவது தொலைக் காட்சி உரை இதுவாகும்.
“தொற்றுக்குள் தொற்று” என்று வைர ஸின் புதிய திரிபுகளின் வேகத்தைக் குறிப்பிட்ட அதிபர் தடுப்பூசித் திட்டங்கள் தொடர்ந்து தீவிரமாக முன்னெடுக் கப்படும் என்று அறிவித்தார்.60 வயது பிரிவினருக்கு ஏப்ரல் 16 தொடக்கமும் 50 வயதுப் பிரிவினருக்கு மே 15 முதலும் தடுப்பூசி ஏற்றும் பணி தொடங்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
“ஒரு கையில் தடுப்பூசியும் மறு கையில் தடுப்பு நடவடிக்கைகளும் கொண்டு நடத்துகின்ற பந்தயம் இது” என்று நிலைமையை அவர் வர்ணித்தார்.
தேசிய அளவில் பொது முடக்கத்தை அமுல் செய்வதில்லை என்று கடந்த ஜனவரியில் எடுத்த தனது முடிவு சரியா னதே என்பதை தனது உரையில் அவர் நியாயப்படுத்தினார். ஆனால் தவறுகள்
இருக்கலாம் என்பதையும் ஏற்றுக் கொண்டார்.
“தொற்று நோயின் ஒவ்வொரு கட்டத்தி லும் நாங்கள் சிறப்பாகச் செயற்பட்டோம் என்று எமக்கு நாமே சொல்லிக் கொள்ள முடியும். நாங்கள் விட்ட தவறும் அது தான். இவை அனைத்துமே உண்மை.. இவற்றில் இருந்து நாங்கள் கற்றுக் கொண்டோம்..” என்று மக்ரோன் குறிப்பிட்டார்.
குமாரதாஸன். பாரிஸ்.
01-04-2021