பாரிஸ் நகருக்கு வெளியே அர்நூவில் (Arnouville) பகுதியில் இளம் பெண் ஒருவரின் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலம் ஒன்றினை காவல்துறையினா் மீட்டிருக்கின்றனர்.
சுமார் 25 வயது மதிக்கத்தக்க இந்தியப் பூர்வீகம் கொண்ட பெண்ணின் சடலம் அது என்று சந்தேகிப்பதாகவும் ஆளை அடையாளம் காணக்கூடிய ஆவணங்கள் எதுவும் சடலத்துடன் காணப்படவில்லை என்றும் காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.
வல- துவாஸ் மாவட்டம் அர்நூவீல் (Arno uville-Val-d’Oise) மரத்தோப்புப் புறத்தில் அந்த சடலம் வழிப்போக்கர் ஒருவரால் புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது என்று ஊடகங்கள் தெரிவித்தன.
மரம் ஒன்றின் அடியில் சடலம் கிடந்த இடத்தில் இரத்தம் காணப்படுவதால் அவர் அந்த இடத்தில் வைத்தே கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
உள்ளாடைகள் அரைகுறையாகக் களையப்பட்ட நிலையில் கிடந்த சடலத்தின் கழுத்திலும் வயிற்றிலும் ஆழமான காயங்கள் காணப்பட்டன என்று நேரில் கண்டவர் களை ஆதாரம் காட்டி ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
மரத்தோப்பு (boisée d’Arnouville) பகுதியில் தாங்கள் தினமும் நடமாடுகின்ற இடம் அது என்பதால் பெரும்பாலும் இரவு நேரத்திலேயே இக் கொலை நிகழ்ந்தி ருக்கலாம் என்று அப்பகுதிப் பண்ணையாளர்கள் சிலர் கூறியுள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. கொலை தொடர்பான விசாரணைகளை பாரிஸ் Versailles குற்றத்தடுப்பு படைப் பிரிவினர் ஆரம்பித்துள்ளனர். #பாரிஸ் #இந்தியப்பூர்வீகம் #யுவதி #சடலம் #Arnouville
—————————————————————–
குமாரதாஸன். பாரிஸ்.02-2021