ஊர்காவற்துறை பகுதியில் இயங்கி வந்த மதுபான சாலை மூடப்படட நிலையில் அதனை மீள திறப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு தீவக சிவில் சமூக அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
குறித்த அமைப்பின் பொருளாளர் கருணாகரன் குணாளன் அது தொடர்பில் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,
ஊர்காவல்துறை பிரதான சாலையில் இயங்கி வந்த மதுபானசாலை தீவக சிவில் சமூக அமைப்பு, பாடசாலை சமூகம், ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலை நிர்வாகம் உள்ளிட்ட அமைப்புக்கள் மற்றும் பிரதேச மக்களின் எதிர்ப்பையடுத்து கடந்த 2016 ஆம் ஆண்டு மூடப்பட்டது.
இந்நிலையில், தற்போது ஊர்காவற்துறை பிரதேச செயலாளரினால் பொது மக்களுக்க்கு விடுக்கப்பட்ட அறிவித்தலில் , கடந்த காலத்தில் ஊர்காவற்துறை சுங்க வீதியில் இயங்கிய மதுபான சாலை மீள செயற்படுத்துவதற்காக ஊர்காவற்துறை சுருவில் வீதியில் உள்ள காணிஇணை தெரிவு செய்துள்ளனர்.
எனவே அதற்கான அனுமதியினை வழங்குவது தொடர்பாக பிரதேச மக்களின் கருத்துக்களை 29.03.2021 ஆம் திகதியிலிருந்து 14 நாட்களுக்குள் கிராம உத்தியோகத்தர் ஊடாக எமக்குத் அறியத் தருமாறு கேட்டுக் கொள்கிறோம். என உள்ளது.
அறிவித்தலில் குறித்த மதுபான சாலை முன்னர் எதற்காக மூடப்பட்டது என்பது தொடர்பான எந்த விபரங்களும் தெரியப்படுத்தப்படாது இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.
இயங்கிக்கொண்டு இருக்கும் மதுபான சாலையை பிறிதொரு இடத்திற்கு மாற்றம் செய்வது போன்ற மாயையை ஏற்படுத்தி மீள திறக்க அனுமதி கோருகின்றனர்.
2019ஆம் ஆண்டு காலப் பகுதியில் இந்த மதுபான சாலை அனுமதியை வைத்திருந்தவர்கள் அதனை மீளத் திறப்பதற்கு அனுமதி கோரி பிரதேசச் செயலாளர் ஊடாக ஊர்காவற்துறை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கோரியிருந்த போதிலும் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை.
ஊர்காவற்துறை காவல் நிலைய குற்றவியல் வருடாந்த அறிக்கையின்படி 2016 க்குப் பின்னரான காலப்பகுதியில் குடும்ப வன்முறை, கோஷ்டி மோதல்கள் மற்றும் வன்முறைகள் கணிசமான வீழச்சியைக் கண்டிருந்தது.
அதற்கு குறித்த மதுபான சாலை மூடப்பட்டிருந்ததும் ஒரு முக்கிய காரணமென நம்புகிறோம். அது மட்டுமல்ல மதுபான சாலைக்குப் புத்துயிரளிக்கும் இச் சமூக விரோதச் செயலின் பின்னணியில் முக்கிய அரசியல் பிரமுகர்கள் இருப்பதாகவும் நாம் சந்தேகமடைகிறோம்.
இந்தச் சமூக அழிவை ஏற்படுத்தக் கூடிய மது பான சாலை திறப்பை எதிர்த்து எதிர்வரும் நாளை வியாழக்கிழமை காலை 10 மணியளவில் ஊர்காவற்துறை பிரதேச செயலகம் முன்றலில் எதிர்ப்புப் போராட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளோம். அதில் மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் அனைவரையும் பங்குபற்றுமாறும் தீவக சிவில் சமூக அமைப்பினர் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். என தெரிவித்தார்.