கண்டி பேராதனை பல்கலைக்கழகத்தின் பட்ட் பின் படிப்புகள் பீடத்தின் பீடாதிபதி என போலியான ஆவணங்களைத் தயாரித்து
நீதிமன்ற வழக்குகளிலிருந்து தப்பித்த “போலி ஆவணங்கள் ஆசாமி” யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தொண்டு நிறுவனம் ஒன்றின் செயலாளராகப் பதவி வகித்தவர், போலி ஆவணங்களைத் தயாரித்து அவற்றைப் பயன்படுத்தி ஆசிரியர்கள், உள்பட பலரிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டமை தொடர்பில் யாழ்ப்பாணம் சிறப்பு குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவில் முறைப்பாடு வழங்கப்பட்டது.
அதனடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டவர் யாழ்ப்பாணம் சிறப்பு குற்றத் தடுப்பு பொலிஸாரால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். அவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.
போலி ஆவணங்களை தயாரித்தமை மற்றும் போலி ஆவணங்களைப் பயன்படுத்தியமை என தனித்தனியே இரண்டு வழக்குகள் சந்தேக நபருக்கு எதிராக பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்டன.
சந்தேக நபர் கடந்த ஆண்டு குறித்த வழக்குத் தவணைக்கு முன்னதாகவே தனது சட்டத்தரணி ஊடாக பொலிஸாரின் இணக்கத்துடன் நகர்த்தல் பத்திரம் அணைத்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகி சில ஆவணங்களை சமர்ப்பித்து குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்வதாகவும் வழக்குகளிலிருந்து விடுவிக்குமாறும் விண்ணப்பம் செய்தார்.
கண்டி பேராதனை பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் படிப்பை நிறைவு செய்து அதே பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பட்டப் பின் படிப்புகள் பீடத்தின் பீடாதிபதியாகவும் தான் உள்ளதாக ஆவணங்களை அவர் சமர்ப்பித்தார்.
அத்துடன் அவரால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை பேராதனை பல்கலைகழகத்தின் பதிவாளர் என ஒருவரும் சான்றுப்படுத்தியிருந்தார்.
சமானதான நீதிவான், பல்கலைகழக பீடாதிபதி, பேராசிரியர் என பல்வேறு ஆவணங்களை ஆராய்ந்த நீதிமன்று, வழக்குத் தொடுனரான பொலிஸார் ஆட்சேபனை தெரிவிக்காததால் சந்தேக நபரை வழக்குகளிலிருந்து விடுவித்தது.
இந்த நிலையில் அந்த வழக்குகள் தவணையிடப்பட்ட திகதியில் முறைப்பாட்டாளர்கள் நீதிமன்றில் முற்பட்ட போது, வழக்குகள் பொலிஸாரின் இணக்கத்துடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டமை தெரியவந்தது.
பல்வேறு முயற்சிகள் எடுத்த போதும் மோசடியாளருக்கு நடவடிக்கை எடுக்க முடியாததால் குறித்த தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகள், பொலிஸ் மா அதிபருக்கு நேரடியாக (Tell the IGP) இணையவழியில் முறைப்பாட்டை வழங்கியிருந்தனர்.
அதனை ஆராய்ந்த பொலிஸ் மா அதிபர், வடக்கு மாகாண மூத்த பொலிஸ் மா அதிபருக்கு வழங்கிய அறிவுறுத்தலுக்கு அமைய சந்தேக நபர், கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார்.
சந்தேக நபர் முன்னைய வழக்குகளில் இருந்து விடுதலையாக சமர்ப்பித்த பேராதனை பல்கலைக்கழக பட்டப்படிப்புகள்
மற்றும் பதவிநிலை ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என அந்தப் பல்கலைக்கழகத்தின் பதிவாளரால் வழங்கப்பட்ட கடிதத்தையும் பொலிஸார் மன்றில் சமர்ப்பித்தனர்.
மேலும் முன்னைய ஆவணங்களை சான்றுப்படுத்திய பதிவாளர் எனக் கூறப்பட்ட பெயரையுடையவர் அந்தப் பல்கலைக்கழகத்தில் தற்போதும் இல்லை முன்னரும் இல்லை எனவும் உறுதிப்படுத்திய ஆவணமும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
சந்தேக நபர் தனது சட்டத்தரணி ஊடாக மேலும் சில ஆவணங்களை சமர்ப்பித்து பிணை விண்ணப்பத்தை முன்வைத்தார்.
சந்தேக நபரின் ஆவணங்களை நிராகரித்த நீதிவான் எச்சரித்தார். அத்துடன், சந்தேக நபரை வரும் ஏப்ரல் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார்.