யாழ்.மாநகர சபையின் காவல் படையின் கடமைகளை உடனடியாக நிறுத்துமாறு மாநகர சபைக்கு அறிவுத்திய காவற்துறையினர், காவல் படையின் சீருடையை பெற்று அதனை கொழும்புக்கு அனுப்ப நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாநகரின் பொது இடங்களில் குப்பை கொட்டினால் 5 ஆயிரம் ரூபாயும், வெற்றிலை துப்பினால் 2ஆயிரம் ரூபாயும் தண்டப் பணம் அறவிடப்படவுள்ளதாக அறிவித்துள்ள மாநகர முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் இந்த நடைமுறையை கையாள்வதற்காக யாழ்ப்பாணம் மாநகர காவல் படை உருவாக்கட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்
குறித்த காவல் படையினர் நேற்றைய தினம் தனது கடமைகளை தொடங்கி இருந்தனர். அந்நிலையில் காவல் படையின் ஒளிப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.
அந்நிலையில் குறித்த காவல் படையின் சீருடை தமிழீழ விடுதலைப்புலிகளின் காவல் துறையின் சீருடைகளை ஒத்த சீருடை என காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை அடுத்து , யாழ்.மாநகர சபை ஆணையாளரை நேற்றைய தினம் இரவு காவல் நிலையத்திற்கு அழைத்த காவற்துறையினர் நீண்ட விசாரணைகளை முன்னெடுத்து சுமார் 3 மணி நேரம் வாக்கு மூலத்தை பதிவு செய்தனர்.
அதனை அடுத்து காவல் படையின் கடமைகளை உடனடியாக நிறுத்துமாறும் , அவர்களின் சீருடைகளை தம்மிடம் ஒப்படைக்குமாறும் காவற்துறையினர் ஆணையாளருக்கு பணித்திருந்தனர். அதன் பிரகாரம் காவல் படையின் கடமைகள் இடைநிறுத்த பட்டுள்ளன. அத்துடன் அவர்களின் சீருடைகளும் காவற்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. காவல் படை தொடர்பில் மூலத்தையும் , சீருடையையும் மேலதிக விசாரணைகள் , நடவடிக்கைகளுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக காவற்துறை நிலைய தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.