யாழ்ப்பாணத்தில் மேலும் 24 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை நேற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது
என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடம்
இரண்டிலும் 760 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.
அதில் 26 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் யாழ்ப்பாணத்தில் 24 பேரும் கிளிநொச்சி, முல்லைத்தீவில் தலா ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் , யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் ஒருவருக்கும் , திருநெல்வேலி பொதுச் சந்தை மற்றும் கடைத் தொகுதிகளைச் சேர்ந்த 22 பேருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் 14 நாள்களின் பின் இன்று முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையிலேயே அவர்களுக்கு தொற்று உள்ளமை
கண்டறியப்பட்டது.
நாளை முதல் கடை திறக்க அனுமதி
அதேவேளை திருநெல்வேலி பொதுச் சந்தை மற்றும் கடைத் தொகுதியில் உள்ள கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களில் கொவிட்-19 நோய்த்தோற்றால்பாதிக்கப்பட்டவர்கள் இனம் காணப்பட்ட கடைகள் தவிர்ந்த ஏனைய கடைகளை நாளை ஞாயிற்றுக்கிழமை காலை தொடக்கம் மீளத் திறக்க அனுமதிப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்
கடந்த மாத இறுதியில் முதல் திருநெல்வேலி பொதுச் சந்தை கடைகள் அனைத்தும் மூடப்பட்டு வர்த்தக நிலையங்களில் பணியாற்றுவோர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் கடந்த 14 நாள்களாக மேற்கொள்ளப்பட்ட இரண்டு பிசிஆர் பரிசோதனைகளில் தொற்று இனங்காணப்பட்டோரின்
கடைகள் தவிர்ந்த ஏனைய கடைகளை நாளை காலை முதல் திறப்பதற்கு அனுமதிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படாத உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களை கடைகளைத் திறக்க அனுமதிக்க முடியாது என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்