கதை எழுதும்போது எதிர்கொண்ட சவால்கள் குறித்தும், திரைக்கதை அமைப்பைத் தான் உருவாக்காதது குறித்தும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பதில் அளித்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் தயாரிப்பில் உருவாகியுள்ள இசையுடன் இணைந்த காதல் கதையான ’99 சோங்ஸ்’ திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கில் ஏப்ரல் 16 அன்று இந்தியா முழுவதும் வெளியாகிறது. இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் அது குறித்து செவ்வி அளித்துள்ளார்.
கதை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். திரைக்கதை அமைப்பை ஏன் நீங்களே உருவாக்கவில்லை?
திரைக்கதையில் நிறைய விஷயங்கள் உள்ளன. திரைப்படத் தயாரிப்பு என்பது வெறும் கதை மட்டும் அல்ல. அதில் சினிமா சம்பந்தப்பட்ட பல விஷயங்கள் உள்ளன. இசை, காட்சிகள், சவுண்ட் டிசைன் ஆகியவை சேர்ந்து ஒரு மேஜிக்தான் சினிமா. அது டைரக்டராக இருந்த அனுபவம் உள்ளவர்களுக்குத்தான் வரும். இயக்குநர் விஸ்வேஷ் நிறைய விளம்பரம் பண்ணியிருக்கிறார். இசை ஆவணப்படங்கள் தயாரித்திருக்கிறார். இருவரும் அமர்ந்து, சிந்திந்து உருவாக்கிய திரைப்படம்தான் இது.
கதை எழுதும்போது நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்ன?
முதல் முறையாக கதை எழுதும்போது, நமக்குத் தெரிந்த விஷயங்கள் அனைத்தையும் தெரிவிக்க வேண்டும் என முயற்சி செய்வோம். 300 சதவீதம் கதை எழுதி அதை 100 சதவீதமாக வடிகட்டி அதை எப்படி கொடுக்க முடியும் என்பதை நான் இந்தப் படத்தில் கற்றுக்கொண்டேன்.
பல்வேறு முன்னணி இயக்குநர்களுடன் பணிபுரிந்துள்ளீர்கள். அவர்களை வைத்து ஏன் இந்தப் படத்தை உருவாக்கவில்லை?
நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் மிகச் சிறந்த படம் எடுத்தவர்கள். இந்தப் படம் ஒரு சின்ன முயற்சி. அதாவது புது வொய்ஸ். இது தற்போதைய நெட்ஃபிளிக்ஸ், யூ டியூப் பார்க்கும், பல செயலிகளைப் பார்க்கும் தலைமுறையினருக்கான படம். உலகம் முழுவதும் உள்ள புதிய தலைமுறையினர் நமது கதையையும் ஏற்றுக்கொள்ளும் வகையில் எடுக்கப்பட்ட படம் இது என ஏ.ஆர்.ரஹ்மான் தனது செவ்வியில் பதிலளித்தார்.