திருநெல்வேலியில் கண்காணிப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட சில பகுதிகள் இன்று காலை முதல் விடுவிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட போதிலும் குறித்த பகுதிகள் இன்றைய தினம் மதியம் வரையில் விடுவிக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலி சந்தை வியாபரிகள் , கூலி தொழிலாளிகள் உள்ளிட்டவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து கடந்த மாதம் 28ஆம் திகதி முதல் சந்தை மற்றும் அதனை சூழவுள்ள வியாபர நிலையங்கள் மூடப்பட்டன.
அத்துடன் திருநெல்வேலி மத்தி , வடக்கு கிராம சேவையாளர் பிரிவான ஜே 114 பிரிவினுள் எவனும் உள் வரவோ வெளியேறவோ அனுமதிக்கப்படாது கண்காணிப்பு வலயமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டவர்களை திருநெல்வேலி சந்தை மற்றும் அதனை சூழவுள்ள வர்த்தக நிலையங்களை திறக்க நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் அனுமதி வழங்கப்பட்டது.
அத்துடன் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை 6 மணி முதல் கண்காணிப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் பாரதி புரம் மற்றும் பாற்பண்ணை பகுதிகளை தவிர ஏனைய பிரதேசங்கள் விடுவிக்கப்படும் என வடமாகாண சுகாதார பணிப்பாளர் மற்றும் யாழ்.மாவட்ட செயலர் ஆகியோர் கடந்த சனிக்கிழமை அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் இன்றைய தினம் மதியம் வரையில் விடுவிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட பகுதிகளிலும் இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினா் காவல் கடமைகளில் ஈடுபட்டு உள்ளத்துடன், வேலைக்கு செல்வோர் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு செல்வோருக்கு மட்டுமே பிரதேசத்தில் இருந்து வெளியேற அனுமதிக்கின்றனர்.
இதேவேளை காவல் கடமையில் ஈடுபட்டுள்ள காவல்துறையினா் மற்றும் இராணுவத்தினரிடம் கேட்ட போது தமக்கு இப்பகுதி விடுவிக்கப்படுவதாக எவ்வித அறிவித்தலும் கிடைக்கவில்லை என தெரிவித்தனர்.