மேற்கு வங்க மாநில தேர்தல் பிரசாரத்தின்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக எழுந்த முறைப்பாட்டினையடுத்து அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜிக்கு 24 மணி நேரம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட இந்திய தேர்தல் ஆணையகம் தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையகம் நேற்று திங்கட்கிழமை மாலை பிறப்பித்த உத்தரவில், ஆதாரமின்றி உண்மைக்கு புறம்பான தகவல்களை மமதா பானர்ஜி பரப்புரையில் பதிவு செய்திருப்பதாகவும் அது தொடா்பில் விளக்கம் கேட்டபோது அவர் உரிய வகையில் விளக்கம் அளிக்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
மாநிலத்தின் முதல்வராக இருந்து கொண்டே தேர்தல் நடத்தை விதிகளை மமதா மீறிய செயலை தேர்தல் ஆணையகம் கண்டிக்கிறது என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மமதா பானர்ஜியின் செயல், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் இருப்பதால், அத்தகைய சர்ச்சைக்குரிய பரப்புரையில் ஈடுபடக் கூடாது எனவும் ஏப்ரல் 12ம் திகதி இரவு 8 மணி முதல் 13ஆம் திகதி இரவு 8 மணிவரை அவர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட தடை விதிப்பதாகவும் ஆணையகம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் நந்திகிராம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் மமதா பானர்ஜி, மத, இன ரீதியாக பேசி வாக்குகளை ஈர்க்க முயற்சி செய்ததாகவும், மத்திய ஆயுதப்படையினரின் செயல்பாட்டை விமர்சிக்கும் வகையிலும் பேசியதாகவும் அவா் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் உள்ள 294 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக 30 தொகுதிகளுக்கு மார்ச் 27, இரண்டாம் கட்டமாக 30 தொகுதிகளுக்கு ஏப்ரல் 1, மூன்றாம் கட்டமாக 31 தொகுதிகளுக்கு ஏப்ரல் 6, நான்காம் கட்டமாக 44 தொகுதிகளுக்கு ஏப்ரல் 10 ஆகிய திகதிகளில் தேர்தல் நடந்தது.
இதைத்தொடர்ந்து, ஐந்தாம் கட்டமாக 45 தொகுதிகளுக்கு ஏப்ரல் 17, ஆறாம் கட்டமாக 43 தொகுதிகளுக்கு ஏப்ரல் 22, ஏழாம் கட்டமாக 36 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26, எட்டாம் கட்டமாக 35 தொகுதிகளுக்கு ஏப்ரல் 29 ஆகிய திகதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை வரும் மே 2ஆம் திகதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது