திருநெல்வேலியில் கண்காணிப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட சில பகுதிகள் நேற்று திங்கட்கிழமை காலை முதல் விடுவிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட போதிலும் குறித்த பகுதிகள் கடந்த 16 நாளாக இன்றைய தினம் இரவு வரையில் விடுவிக்கப்படவில்லை.
விடுவிக்கப்பட்டதாக அரச அதிகாரிகளால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை பாதுகாப்பு படையினர் மற்றும் காவல்துறையினா் தொடர்ந்தும் முடக்கத்தில் வைத்திருப்பதனால் , அப்பகுதி மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.
வடமாகாண சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் யாழ்.மாவட்ட செயலர் ஆகியோரினால் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் நாளைய தினம் புத்தாண்டை முன்னிட்டு ஆலயங்களுக்கு செல்வதற்கு தடை காணப்படுகின்றது
இது தொடர்பில் அரச அதிகாரிகள் அசண்டையீனமாக நடந்து கொள்வது தொடர்பில் அப்பகுதி மக்கள் கடும் விசனம் தெரிவித்தனர்.
இராணுவத்தினருக்கு முடக்க வேண்டிய பகுதியின் எல்லைகளை சரியாக அசர அதிகாரிகள் அடையாளம் காட்டவில்லையோ என , அப்பகுதி மக்கள் மத்தியில் சந்தேகம் நிலவுகின்றது.
திருநெல்வேலி சந்தை வியாபாரிகள் , கூலி தொழிலாளிகள் உள்ளிட்டவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து கடந்த மாதம் 28ஆம் திகதி முதல் சந்தை மற்றும் அதனை சூழவுள்ள வியாபார நிலையங்கள் மூடப்பட்டன.
இந்நிலையில் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டவர்களை திருநெல்வேலி சந்தை மற்றும் அதனை சூழவுள்ள வர்த்தக நிலையங்களை திறக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அனுமதி வழங்கப்பட்டது.