உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட ஸஹ்ரானின் சகோதரி, சியோன் தேவலாய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உள்ளிட்ட வேறு வேறான 4 வழக்குகளை கொண்ட 64 பேரையும் எதிர்வரும் 29 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காணொளி மூலம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.ஏ றிஸ்வான் இன்று (15.04.21) உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 21.4.2019 உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் ஸஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும், ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களுக்கு இவர்கள் பயிற்சிக்காக சென்றார்கள் என்றும் இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டு இருந்தது.
இதனடிப்படையில் சந்தேகத்தின் பேரில் கைதான காத்தான்குடியை சேர்ந்த 63 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 5 பேர் பிணையில் விடுவிகப்பட்ட நிலையில் 58 பேர் தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த 58 பேருடன் குண்டுதாக்குதல் தொடர்பாக வேறு வேறான 4 வழக்கு இலக்கங்களை கொண்ட ஸஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர், சியோன் தேவாலய தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட ஆசாத்தின் தாயார் சீயோன் தேவாலய தற்கொலை குண்டுதாரிக்கு பிரயாணம் செய்ய பேருந்து ஆசனப் பதிவு செய்த சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 6 பேர் உட்பட 64 பேரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.