அந்நியன் படத்தின் கதை, திரைக்கதை எழுதியது நான்தான்; அதனை விரும்பியபடி பயன்படுத்தும் உரிமை என்னிடமே உள்ளது,” என ஒஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரனுக்கு இயக்குநர் ஷங்கர் பதிலளித்துள்ளார்.
அந்நியன் படத்தின் கதை உரிமை முழுமையாக தன்னிடம் இருப்பதால் அந்தப் படத்தை இந்தியில் ரீ – மேக் செய்யக்கூடாது என இயக்குநர் ஷங்கருக்கு அந்நியன் படத்தின் தயாரிப்பாளர் ஒஸ்கர் பிலிம்ஸ் வி. ரவிச்சந்திரன் கடிதம் அனுப்பியிருந்தார்.
அந்தக் கடிதத்தில் , “அந்நியன் படத்தின் தயாரிப்பாளர் நான்தான். படத்தின் கதை உரிமை முழுவதையும் எழுத்தாளர் சுஜாதாவிடமிருந்து நான்தான் வாங்கியிருக்கிறேன். அதற்கான பணமும் அவருக்குக் கொடுக்கப்பட்டுவிட்டது. அந்தக் கதையின் முழுமையான உரிமையாளர் நான்தான். இந்த நிலையில், என்னுடைய அனுமதி இல்லாமல் அந்தக் கதையை தழுவியோ, மூலக்கருவைக் கொண்டோ, ரீ – மேக் செய்து படம் எடுப்பது சட்டவிரோதமாகும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையிலேயே ரவிச்சந்திரனிற்கு இயக்குநர் ஷங்கர் பதிலளித்துள்ளார்.
கடந்த 2005ஆம் ஆண்டு விக்ரம், சதா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோாின் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த அந்நியன் திரைப்படத்தை ஒஸ்கா் பிலிம்ஸ் சார்பில் வி. ரவிச்சந்திரன் தயாரித்திருந்தார்.
இந்த நிலையில், இந்தப் படத்தை ரன்வீர் சிங்கை வைத்து இந்தியில் ரீ – மேக் செய்யப்போவதாகவும் அதனை ஜெயந்திலால் கடா என்பவர் தயாரிக்கவுள்ளதாகவும் இயக்குநர் ஷங்கர் நேற்று அறிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே அந்நியன் படத்தின் கதை உரிமை முழுமையாக தன்னிடம் இருப்பதால் அந்தப் படத்தை இந்தியில் ரீ – மேக் செய்யக்கூடாது என இயக்குநர் ஷங்கருக்கு அந்நியன் படத்தின் தயாரிப்பாளர் ஒஸ்கர் பிலிம்ஸ் வி. ரவிச்சந்திரன் கடிதம் அனுப்பியிருந்தாா்.