யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எதிர்வரும் 19 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட தற்போதைய நிலைமை தொடர்பில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலையே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
யாழ். மாவட்டத்தில் கடந்த ஒக்ரோபர் மாதம் தொடக்கம் 15ஆம் திகதி மாலை வரையிலான நிலைவரப்படி 1116 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தொற்றுக்கு இலக்காகி, 12 மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில், இன்னும் 600 பேரளவில் வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
மேலும், 1784 குடும்பங்களைச் சேர்ந்த 5042 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, யாழ். மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் சற்றுக் குறைந்துவரும் நிலையில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதனால் தொடர்ந்து யாழ். மாவட்டத்தை இயல்பான நிலையில் வைத்திருக்க மக்கள் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்து சுகாதார தரப்பினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.