தடைசெய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
அந்த அமைப்புகளின் தலைவர்களிடமிருந்து தகவல் பெறப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சரத் வீரசேகர, இதுவரை 11 தீவிரவாத அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
“நாங்கள் 11 தீவிரவாத அமைப்புகளை முற்றிலுமாக தடை செய்துள்ளோம். அந்த அமைப்புக்களின் தலைவர்களை அழைத்து வந்து விசாரணைகளை நடத்தி வருகிறோம். அவர்களின் சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் குறித்து எங்களுக்கு அறிக்கை கிடைத்தவுடன், நாங்கள் அவற்றை பறிமுதல் செய்வோம், அவற்றின் உறுப்பினர்கள் அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது, அவர்கள் தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் பரப்பினால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்., அவர்களின் சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் குறித்த விசாரணை அறிக்கைகளைப் பெற்ற பிறகு, அந்த அறிக்கையை சட்டமா அதிபரிடம் சமர்ப்பித்து, அவற்றை அரசுடைமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், அவர்கள் தீவிரவாதம், மத தீவிரவாதம் மற்றும் மக்களைக் கொல்ல சதித்திட்டங்களை தீட்டியிருந்தால், நாங்கள் ஏற்கனவே அவர்களை கைது செய்து விட்டோம். இந்த சித்தாந்தவாதிகள் யார் என்று எமக்கு சொல்ல முடியாது. அது அவர்களது மூளையில் உள்ளது. எனவே சித்தாந்தவாதிகள் எதிர்காலத்தில் அந்த சித்தாந்தத்தை தொடர்ந்தும் பரப்புகிறார்களா என நாங்கள் விசாரணை செய்து வருகின்றோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.