20A திருத்தத்துக்கு ஆதரவாக அணி மாறி வாக்களித்த தமிழ் பேசும் எம்பீக்களுக்கு, நாம் இந்த சட்டமூலங்களுக்கு ஆதரவளிக்க “மாட்டோம், மாட்டோம்” என இரண்டு முறை தாம் இப்போது அங்கம் வகிக்கும் அரசுக்கு இடித்துக்கூறி, பாவமன்னிப்பு பெற சந்தர்ப்பம் வருகிறது என தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர், முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து கலாச்சார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,
இன்றைய அரசாங்கம், பாராளுமன்றத்தில் இரண்டு சட்ட மூல மசோதாக்களை கொண்டு வந்து நாட்டையும், இந்நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களையும் ஆபத்தில் போட திட்டமிடுகிறது. இந்த ஆபத்துகள் இன்று எம் கண் முன்னே தெரிகின்றன.
ஒன்று, நமது தமிழ் பேசும் மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களை அழித்து, ஒழிக்கும் உத்தேச இரகசிய திட்டமிடலும், முயற்சியும் ஆகும். அதாவது, இந்நாட்டில் இன்றுள்ள தேர்தல் முறை சட்டங்களை திருத்தியமைக்க, இவர்கள் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் கொண்டுவர திட்டமிடும் சட்டமாகும்.
இரண்டாவது, இந்நாட்டில் நிலவும் சட்டங்களிலிருந்து விலக்களித்து, சீன நாட்டுக்கு விசேட சலுகைகளை அளித்து, கொழும்பு தலைநகரை ஒட்டி, மேற்கு கரையில் அமைகின்ற, தனியொரு நிர்வாகம் கொண்ட “துறைமுக நகர்” ஆகும்.
இந்நாட்டில் தமிழ் மக்களின் ஜனத்தொகையில் 50 விகிதமும், முஸ்லிம் மக்களின் ஜனத்தொகையில் 65 விகிதமும், வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே, தென்னிலங்கையில் வாழ்கிறார்கள். இப்படி பரவி, விரவி வாழும் தமிழ் பேசும் சிறுபான்மை மக்களின் பாராளுமன்ற மற்றும் மாகாணசபை பிரதிநிதித்துவங்களை இல்லாமல் ஒழிக்கும் புதிய தேர்தல் முறைமையை, இன்றைய அரசின் பிரதான கட்சியான பொதுஜன பெரமுன கொண்டு வர முயல்கிறது.
அதிஷ்டவசமாக, இன்று அரசின் உள்ளே இருக்கும் பங்காளி சிறுகட்சிகளின் இருப்பையும் இந்த புதிய தேர்தல் முறை யோசனைகள் சவாலுக்கு உட்படுத்துகின்றன. ஆகவே அரசுக்கு உள்ளே இருக்கும், சிங்கள மக்களை பிரதிநித்துவம் செய்யும் சிறு பங்காளி கட்சிகள் இதை அரசுக்கு உள்ளேயே இருந்து எதிர்க்கின்றன. நாளை இந்த கட்சிகள் பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் இது தொடர்பில் கலந்துரையாடுகின்றன.
ஆனால், அரசின் உள்ளே இருக்கும் தமிழ், முஸ்லிம் பங்காளி கட்சியினரும், 20ம் திருத்தத்துக்கு ஆதரவாக அரசு பக்கம் தாவிய எம்பீக்களும் அமைதி காக்கின்றனர். இது இன்று தமிழ் பேசும் மக்களின் சாபக்கேடாக இருக்கிறது.
இன்று இருக்கும் தமிழ் பேசும் எம்பீக்கள், அமைச்சர்கள் நாளை இல்லாமல் போகலாம். ஆனால், இந்த நாடு இருக்கும். இந்நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள் வாழத்தான் போகிறார்கள். இந்த உத்தேச தேர்தல்முறை மாற்ற முயற்சி, 20ம் திருத்தத்தை விட மிக மிக ஆபத்தானது. எமது மக்களின் இருப்பை இந்நாட்டில் இல்லாமல் செய்யும் உள்நோக்கம் கொண்டது.
ஆகவே எதிர்காலத்தில் எமது தமிழ், முஸ்லிம் இனங்களின் பிரதிநிதித்துவங்களை இல்லாமல் செய்யும் சட்டமூலங்களுக்கு முட்டாள்தனமாக கையை தூக்கி, வரலாற்றின் சாபத்துக்கு மீண்டும் ஒருமுறை உள்ளாக வேண்டாம் என சம்பந்தபட்டவர்களுக்கு கூறி வைக்க விரும்புகிறேன்.
கடந்த அரசில் பங்காளி கட்சி அமைச்சர்களாக நாம் இருக்கும் போது, நமது மக்களின் இருப்புக்கு ஆபத்து வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் உரக்க குரல் கொடுத்து அரசுக்கு உள்ளேயே சண்டையிட்டு, எமது இருப்பை உறுதி செய்தோம் என்பதையும் இங்கே நான், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் என்ற முறையில் பெருமையுடன் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
அதேபோல், அடுத்த தேசிய ஆபத்து, சீன நாட்டுக்கு விசேட சலுகைகளை அளித்து, இந்நாட்டில் நிலவும் சட்டங்களிலிருந்து விலக்களித்து, கொழும்பு தலைநகரை ஒட்டி, மேற்கு கரையில் அமைக்கின்ற தனியொரு நிர்வாகம் கொண்ட “துறைமுக நகர்” ஆகும். இதற்கான விசேட வர்த்தமானி பிரகடனம் வெளியாகி விட்டது.
நாளை பாராளுமன்ற கட்சி தலைவர் கூட்டத்தில், இது தொடர்பில் பேசப்படும். நீதிமன்ற தீர்ப்புகளுக்கு பின் இந்த சட்டமூலம் பாராளுமன்றம் வருமா, இல்லையா, வருமானால், வரும் திகதி என்பவை மீண்டும் கட்சி தலைவர்கள் கூடி முடிவு செய்வோம்.
இந்நிலையில், 20ம் திருத்தத்துக்கு ஆதரவாக அணி மாறி வாக்களித்த தமிழ் பேசும் எம்பீக்கள் ஒன்று கூடி, சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவங்களை ஒழிக்கும் தேர்தல் முறைக்கு ஆதரவாக நாம் வாக்களிக்க மாட்டோம் என்றும், துறைமுக நகரை சீனாவுக்கு தாரை வார்க்கும் சட்டமூலத்துக்கு ஆதரவாக நாம் வாக்களிக்க மாட்டோம் என்றும், தாம் இன்று அங்கம் வகிக்கும் அரசுக்கு உறுதியாக இடித்துரைக்க வேண்டும் என நான் இந்நாட்டின் தமிழ், முஸ்லிம் மக்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.