ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளுடன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, அவசர சந்திப்பொன்றை இன்று (19.04.21) நடத்த விருக்கின்றார். அதற்கான அழைப்புகள், சகல கட்சிகளின் தலைவர்களுக்கும் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிலவ வருடப் பிறப்புக்குப் பின்னரான முதலாவது சந்திப்பாக இச்சந்திப்பு இருந்தாலும், பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை தனியாகவும், பங்காளி கட்சிகளின் உறுப்பினர்களை தனியாகவுமே பிரதமர் சந்திக்கவுள்ளாரென கூறப்படுகிறது.
இவ்விரு சந்திப்புகளும் இன்று (19.04.21) காலையும் மாலையும் அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளன. இதன்போது, மாகாண சபைத் தேர்தல் மற்றும் மே தின நிகழ்வுகள் தொடர்பில் கலந்துரையாடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள், மேதின கூட்டங்களை தனித்தனியாக நடத்தவிருப்பதாக தகவல்கள் கசிந்திருந்தன. இதேவேளை, முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவுடன், 11 கட்சிகளின் தலைவர்கள் அண்மையில் சந்திப்பொன்றை முன்னெடுத்திருந்தனர்.
அத்துடன், மாகாண சபைத் தேர்தல் முறைமையில் இரண்டு விடயங்களில் மாற்றங்களை ஏற்படுத்தாது, தேர்தலை நடத்தினால், அதற்கும் கடுமையான எதிர்ப்பை தாங்கள் தெரிவிப்போமென ஆளும் கட்சியை சேர்ந்த சில கட்சிகள் பகிரங்கமாகவே அறிவித்திருந்தன.
குறிப்பாக, துறைமுக நகர் விவகாரம் தொடர்பில் அரசாங்கத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் கடுமையாக முன்வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழலை கருத்தில் கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் முக்கியமான இரண்டு சந்திப்புகள் இன்றையதினம் இடம்பெறவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.