இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் 8 ஆம் திகதியன்று சமர்ப்பிக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தொடர்பான சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான மேலதிக விசாரணைகள், நாளைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஐந்து நீதியரசர்கள் அடங்கிய குழாம் முன்னிலையில், இன்றையதினம் மனுக்கள் யாவும் ஆராயப்பட்டன.
சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி 19 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த மனுக்கள் யாவும். பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிஹார, பிரியந்த ஜயவர்தன, முர்து பெர்ணான்டோ மற்றும் ஜனக் த சில்வா ஆகிய ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் அழைக்கப்பட்டது.
மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாக நீதிமன்றில் காரணங்களை முன்வைத்த பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, குறித்த சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையால், சகல சட்டத்தரணிகளும் தமது வாய்மூல விளக்கங்களை முன்வைக்க 20-30 நிமிடங்கள் ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
அதன்பின்னர், மாற்று கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கே. கனகஈஸ்வரன் தமது தரப்பு காரணங்களை முன்வைத்ததுடன், நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள சட்டமூலமானது, மக்களின் இறையான்மையையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் கடுமையாக மீறுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.