இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவுதல் அதிகரித்துள்ள நிலையில், தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை அறிய முடிகிறது என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் உத்தியோகபூர்வ முகநூலில் பதிவிடப்பட்டுள்ளது.
குறித்த பதிவில் காணப்படுவதாவது,
இலங்கையில் இதுவரை காணப்படாத புது வகையான
கொரோனா வைரசு இனங்காணப்பட்டு கடந்த சில நாட்களில் பதிவாகியுள்ளது.
இது குறித்த விஞ்ஞான ரீதியானஆய்வு மற்றும் தகவல் மதிப்பீட்டாய்வு தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில், பொது மக்கள் அனைவரும் அதிக கவனம் செலுத்துதல் அவசியம்.
நோய்த் தடுப்பு ஆலோசனைகளைப் பின்பற்றுவதன் மூலம் நோய் பரவுவதை மிக விரைவாகக் கட்டுப்படுத்த முடியும் என்பதை நாம் அனைவரும் கடந்த காலத்தில் கண்டு கொண்டுள்ளோம்.
கடந்த பண்டிகை காலங்களைத் தொடர்ந்து இச்சுகாதார வழிகாட்டுதல் நடைமுறைகளை கடைப்பிடித்தல் படிப்படியாகக் குறைந்து வந்ததே இந்த புதிய பாதிப்பு உருவாக சந்தேகத்திற்கு இடமின்றி வழிவகுத்தது.
மீண்டும் கடுமையான சட்டங்களை அமுல்படுத்துவது மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் போன்ற செயல்களைத் தவிர்ப்பதற்கு, ஒரு சமூகமாக செயற்பட எமக்கு நோய் நிவாரணிக்கான பொறுப்பை மீளவும் நினைவுபடுத்துவது காலத்தின் கட்டாயமாகும்.
இந்த தடுப்பு நடவடிக்கைகளில் கைகளை சுத்தமாக வைத்திருத்தல், முகக்கவசம் அணிவது, மக்களிடையே இடைவெளி பேணல், நெரிசலான இடங்களைத் தவிர்ப்பது, இருமல், தொண்டை நோ அல்லது சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் சன நெருக்கமான இடங்களுக்கு செல்வதைத் தவிர்த்தல், சன நெரிசல் மிக்க இடங்களைத் தவிர்ப்பது ஆகியவை அடங்கும்.
ஏற்கனவே சுகாதார வழிகாட்டுதல்களை உரியவாறு முறையாகக் கடைப்பிடித்து நடைமுறைப்படுத்தியமையால் கடந்த சில மாதங்களாக இலங்கை வாசிகள் அனைவருக்கும் ஒருவித விடுதலை உணர்வை அனுபவிக்க முடியுமாயிருந்தது. ஆதலால் நாம் மீண்டும் நோய்த்தடுப்பு நடவடிக்கை வழிகாட்டுதல்களை கடைபிடிப்பது என்பது கடினமான காரியமல்ல.
ஆகையால், எதிர்வரவிருக்கும் காலம் முழுவதும், மீண்டும் சுகாதார வழிமுறைகளை உரியவாறு முழுமையாகப் பின்பற்றி, தேவையற்ற போக்குவரத்துப் பயணங்களை முடிந்தவரை குறைத்து, தமக்கு நோயறிகுறிகள் தென்பட்டால் ஏனையோரை பாதுகாக்கும் வகையில் செயற்பட்டு, மீண்டுமொரு முறை நாடு முழுவதும் கொரொனா நோய்த்தொற்று பரவாது தடுக்க பொறுப்புணர்ந்து செயற்படுமாறு சுகாதார அமைச்சின் சார்பாக இலங்கை வாழ் சகலரிடமும் வேண்டிக் கொள்கின்றோம். என பதிவிடப்பட்டுள்ளது