சவுதி தடுப்பு முகாம்கள் மற்றும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை பெண்களை மீள அழைக்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதாக அரசாங்கம் கூறியுள்ளது.
சவுதி அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தொழிலாளர் அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச மன்னிப்புச் சபை கைதிகளின் விபரங்களை வெளியிட்டதை அடுத்து, சவுதி அரேபியாவில் உள்ள தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை பெண்கள் குறித்து அரசு அவதானம் செலுத்தியுள்ளது.
சிறைச்சாலைகளில் உள்ள இலங்கை பெண்களை விடுவித்து நாட்டிற்கு விடுவிக்க சவுதி அரசு இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, சவுதி அரேபிய விமான சேவை ஊடாக பெண்களை இலங்கைக்கு அனுப்பிவைக்க சவுதி உறுதியளித்துள்ளது.
இதற்கமைய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விமானத்தை இலங்கையில் தரையிறக்க அனுமதிப்பது குறித்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் விமான நிலைய அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் நிமல் சிரிபால டி சில்வா கூறியுள்ளார்.
எனினும், சவுதி சட்டத்திற்கு அமைய பெண் கைதிகளை விடுவிப்பது எவ்வாறு என்பது குறித்த தகவல்களை அரசாங்கம் தெளிவுபடுத்தவில்லை.
இலங்கையின் கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகள் மற்றும் சுகாதார பராமரிப்பு வழிகாட்டுதல்களுக்கு அமைய இந்த பெண்களை விரைவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கமைய, சவுதி அரேபியாவில் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 156 இலங்கை பெண்கள் நாட்டிற்கு மீள அழைக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
சவுதி அரேபியாவில் இலங்கை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டதற்கான காரணம் குறித்த தகவல்களை அரசாங்கம் வெளியிடவில்லை.