நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் இன்று (24.04.21) அதிகாலை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு குண்டுதாரிகளுக்கு உதவியமை மற்றும் நெருங்கிய தொடர்பை பேணியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை
தாமும், தமது சகோதரரும் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் ட்விட்டர் பதிவொன்றையும் பதிவு செய்துள்ளார்..
“என்னை எவ்விதமான ஆதாரங்களுமின்றி கைது செய்யும் வகையில், இன்று அதிகாலை 1.30 மணி முதல் பௌத்தாலோக மாவத்தையிலுள்ள எனது வீட்டின் முன்னால் சிஐடியினர் உள்ளனர். எனது சகோதரரை ஏற்கனவே கைது செய்துள்ளனர். நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினர். இதுவரையில் சகல சட்டபூர்வ விசாரணைகளுக்கும் முழு ஆதரவை வழங்கியுள்ளேன். இது சட்டத்துக்கு முரணானது” என அந்த ட்விட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடைய விசாரணைகளை முன்னெடுப்பதற்காக முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட வட்டாரங்களிலிருந்து அறிய முடிகின்றது.