ஊர்காவற்துறை பாடசாலை மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஊர்காவற்துறை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 09இல் கல்வி கற்பிக்கும் ஆசிரியை , தான் வகுப்பு வரும் போது மாணவன் எழுந்து “குட் மோர்னிங்” சொல்லவில்லை என தடியினால் அடித்த போது தடி கண்ணில் பட்டுள்ளது. அதானல் கண்ணில் வலி ஏற்பட்டு மாணவன் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று இருந்தாா்.
இது தொடர்பில் அறிந்த மாணவனின் தாயார் மறுநாள் பாடசாலைக்கு சென்று அதிபரை சந்திக்க நீண்ட நேரம் காத்திருந்தார். பாடசாலை முடிவடைந்த பின்னரே அதிபர் தாயாரை சந்தித்துள்ளார்.
தாயார் சந்தித்து விட்டு சென்ற பின்னர் அதிபர் மாணவனை அழைத்து , தாய்க்கு , ஆசிரியை அடித்த விடயத்தை ஏன் கூறினாய் என கேட்டும் , தாய் குறித்து அவதூறாக பேசியும் மாணவனை தாக்கியுள்ளார்.
இதனால் காயத்திற்கு உள்ளான மாணவன் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றாா்.
வைத்திய சாலை காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் மாணவனிடம் வாக்கு மூலம் பெற்று மேலதிக நடவடிக்கைகளுக்காக ஊர்காவற்துறை காவல்துறையினருக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதனடிப்படையில் ஊர்காவற்துறை காவல்துறையினர்விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.