Home இலங்கை றிசாட் பதியுதீன் கைதிற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கண்டனம்!

றிசாட் பதியுதீன் கைதிற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கண்டனம்!

by admin

ரிசாட் பதியுதீன் கைது செய்யப்பட்டமையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வன்மையாகக் கண்டிக்கின்றது என, ஊடக மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்துள்ளார.


அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் இன்று அதிகாலை இரண்டு மணியளவில் அவரது வீட்டில் வைத்து பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டமையை கண்டித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் ஊடக சந்திப்பு ஒன்றினை கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பி.ப 1.00 மணியளவில் நடாத்தியிருந்தார். அவ் ஊடக சந்திப்பில் கட்சியின் பிரசார செயலாளர் சட்டதரணி நடராஜர் காண்டீபன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார். மேற்படி ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் கூறிய கருத்துக்கள் வருமாறு.


நேற்று இரவு (இன்று அதிகாலை) 3 மணி அளவிலே அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்ட செய்தியை நாங்கள் அறிந்தவுடன் அதிர்ச்சியுற்றோம். அவர் கைது செய்யப்பட்டமைக்குரிய காரணங்களை ஆராய்ந்தபோது, உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் நடவடிக்கைகளுக்கு இரண்டு வருடங்களுக்கு முதல் அவர் அந்த செயற்பாட்டில் உதவிகள் புரிந்ததாக குற்றஞ்சாட்டி பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு சந்தேக நபராக கைது செய்யப்பட்டிருப்பதாக நாங்கள் அறிந்திருக்கின்றோம்.

இதற்கு முதலும் ரிஷாட் பதியுதீன் அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு அதற்குப் பிற்பாடு விடுவிக்கப் பட்டிருந்தார். மீண்டும் குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு உதவி செய்திருந்தார் என்ற பாரிய குற்றச்சாட்டை முன்வைத்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழே திடீரென இரவோடிரவாக கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

எம்மை பொறுத்தவரையில் அவர் கடந்த இரண்டு வருடங்களாக அவர் தொடர்பாக இடம்பெறுகின்ற விடயடங்களை எடுத்து பார்க்கின்ற பொழுது அவருடைய தற்போதைய கைதானது அரசியல் நோக்கத்தோடு முன்னெடுக்கப்பட்ட ஒரு விடயமாகத்தான் நாங்கள் கருதுகிறோம்.


ஏனைய நாடுகள் போன்றல்ல. இலங்கையிலே இருக்கக்கூடிய பொலிஸ் பிரிவு மிகவும் துரதிஸ்டவசமாக இந்த நாட்டிலே ஆட்சி செய்யும் கட்சியிகளுடைய ஒரு அங்கமாக செயற்படுகின்ற ஒரு நிலைமையினைத்தான் காணக்கூடியதாக இருக்கின்றது. பொலீஸ் பிரிவானது ஒரு சுயாதீனமாக செயற்படுகின்ற கட்டமைப்பாக இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.


அதிலும் குறிப்பாக இன்றைக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதென்பது உலகத்திலேயே மிகவும் வன்மையாக கண்டிக்கப் படுகின்ற ஒரு மோசமான கொடூரமான ஒரு சட்டமாக கருதப்படும் பயங்கரவாதத் தடைச்சட்டம் சட்டப் புத்தகங்களில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று சர்வதேச சமூகத்தினாலேயே கூறப்பட்டிருக்கின்றது.

இந்தப் பின்னணியில் இதற்கு முதலில் இருந்த அரசாங்கமும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி அதற்கு பதிலாக சர்வதேச நெறிமுறைகளுக்கு அமைவாக ஒரு புதிய சட்டத்தை கொண்டு வருவதாக சர்வதேச சமூகத்திற்கு கூறியிருந்தது. அதேபோல இந்த அரசாங்கமும் அதில் பாரிய திருத்தங்களை சர்வதேச விதிமுறைகளுக்கு அமைவாக திருத்தங்களை செய்வதற்கு தயார் என்று ஐநா மனித உரிமை போன்ற கட்டமைப்புகளுக்கு வாக்குறுதிகளை வழங்கியிருந்து.


ஆனாலும் இன்றைக்கும் அதே மோசமான பயங்கரவாத தடை சட்டத்தின் கீழேயே றிசாட் பதியுதீனும் கைது செய்யப்பட்டிருக்கின்றார். இந்த பயங்கரவாத தடைச் சட்டம் என்கின்ற மோசமான தடைச்சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒரு கட்சி என்ற வகையில் எங்களுக்கு நன்றாக தெரியும் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகின்ற பொழுது அந்த நடவடிக்கைகள் ஊடாக நீதியைப் பெறுகின்ற விடயத்தை விட அநீதி நிலைநாட்டப்படுகின்ற ஒரு யதார்த்தம் தான் இங்கு இருக்கின்றது.

அதுமட்டுமல்லாமல் இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகின்றவர்களும் வழக்குகள் அந்த சட்டத்தின் கீழே மேற்கொள்ளப்படுகின்ற இடத்தில் ஒன்று மிகத் தெளிவாக விளங்குகின்றது.

கடந்த அனுபவங்களை எடுத்து பார்க்கின்ற பொழுது மிகப்பெரிய பெரும்பான்மையான உதாரணங்களில் அரசாங்கத்திற்கு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரிக்க படுகின்ற அந்த குறிப்பிட்ட நபருக்கு எதிராக சாட்சியங்கள் இல்லாத ஒரு நிலைமையில் தான் அவர்கள் இந்த பயங்கரவாத தடை சட்டத்தை பயன்படுத்துகிறார்கள்.


அந்த வகையிலே நாங்கள் ரிசாட் பதியுதீன் அவர்களுடைய கைது நடவடிக்கையையும் நாங்கள் அந்த கோணத்திலேயே நோக்குகின்றோம். அவருக்கு எதிராக சாட்சியங்கள் இருந்திருந்தால் எப்பொழுதோ இந்த விடயங்கள் விசாரிக்கப்பட்டிருக்கும். ஆனால் அப்படி நடக்கவில்லை.

இன்றைக்கு அரசாங்கத்தினுடைய செயற்பாடுகள் மிக மோசமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற பொழுது அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடைபெற்ற பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கைகளும் அந்த குற்றங்களுக்கு பின்னால் இருக்கக்கூடிய எவரையும் கைது செய்யாமல் அரசாங்கமே அதன் பின்னணியில் இருந்ததாக பாரிய குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப் பட்டிருந்த நிலையில் கத்தோலிக்க ஆயர் மல்கம் ரஞ்சித் போன்றவர்கள் அரசாங்கத்துக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்ற இந்த நிலையில் அனைத்து விடயங்களிலும் இருந்து தப்பித்துக் கொள்வதற்கும் உண்மையான நபர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்காமல் மக்களை திசை திருப்பி இந்த வழக்கு சம்பந்தப்பட்ட விடயங்களில் ஒரு பிழையான திசைக்கு மக்களுடைய பார்வையை கொண்டு செல்வதற்குமான நடவடிக்கைகளாக தான் நாங்கள் இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் சந்தேகிக்க வேண்டி இருக்கின்றது.

சாட்சியம் இல்லாத இடத்தில் நபர்களை வழக்குகளின் ஊடாக தண்டிக்க முடியாத நிலையில் வழக்கு முடிவதற்கு முதலே தண்டனையும் முழுமையாக அனுபவிக்குமாறு நபர்களை பழிவாங்கும் நோக்கத்தோடு தான் நீங்கள் இந்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பயன்படுத்துகிறீர்கள் என்பதனையும் நாங்கள் இங்கு பகிரங்கமாக கூற விரும்புகின்றோம்.


றிசாட் பதியுதீனின் கைது நடந்த விதம் கைது இடம்பெற்ற நேரத்தையும் எடுத்து பார்க்கின்ற பொழுது நிச்சயமாக ஒரு அரசியல் பின் நோக்கத்தோடுதான் இது நடைபெற்றதாக நாங்கள் பார்க்கின்றோம். மீண்டும் நாங்கள் இந்த கைது நடவடிக்கைகளை வன்மையாக கண்டிக்கின்றோம்.

நன்றி
ஊடகப் பிரிவு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More