Home இந்தியா இரண்டாவது அலை இந்தியாவை இப்படித் தாக்குவது ஏன்? பாரிஸிலிருந்து.. குமாரதாஸன்.

இரண்டாவது அலை இந்தியாவை இப்படித் தாக்குவது ஏன்? பாரிஸிலிருந்து.. குமாரதாஸன்.

by admin

டில்லி சட்ட மன்ற உறுப்பினர் பரத்வாஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உதவி கோரி ருவீற்றர் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார்.


“பெரும் எண்ணிக்கையானோர் இங்கே ஒக்சிஜனில் தங்கியிருக்கிறார்கள். அது கிடைக்காவிட்டால் தண்ணீர் இன்றி மீன்கள் இறப்பது போன்று மரணங்கள் நிகழும். இன்னமும் மூன்று மணி நேரங்களுக்குத் தேவையான ஒக்சிஜன் மட்டுமே
இங்குள்ளது….”


அவர் கூறியது போன்று இந்திய மருத்துவமனைகளில் நீரின்றி மீன்கள் இறப்பது போல மனிதர்கள் மடிந்து கொண்டிருக்கிறார்கள்.
“இந்த முறை தொற்று மிக வேகமாக இருக்கிறது. மருந்து எடுப்பதற்கு அவகாசம் இல்லை. வைரஸ் பரிசோதனை செய்து அறிக்கை கிடைப்பதற்குமுன்னரே பலர் உயிரிழக்கின்றனர்.”


இந்தியாவில் கட்டுமீறியுள்ள வைரஸ் நிலைவரம் குறித்து மருத்துவர் எஸ். கே. பாண்டே (Dr. S K Pandey) என்பவர் அசோசி யேட்டட் பிரஸ்(AP) செய்திச் சேவையிடம் இவ்வாறு கூறியிருக்கிறார். உத்தரப் பிர தேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவ விஞ்ஞான நிலையத்தைச் (Ram Manohar Lohia Institute of Medical Sciences) சேர்ந்தவர் டாக்டர் பாண்டே.


இந்தியாவில் வைரஸ் திரிபுகள் பரவுகிற வேகமும் எண்ணிக்கையும் இவரைப் போன்ற பல மருத்துவர்களையும் அறிவியலாளர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டுள்ளது. தொற்று நோயியலாளர்கள்
சிலர் “இது ஒரு புரியாத புதிர்” என்கின்றனர்.


குடும்பத்தில் ஒருவரைப் பீடித்து மறுநாளிலேயே வீட்டில் அனைவருக்கும் தொற்றிக் கொள்கிறது. கடும் வயிற்றோட்டம், சத்தி போன்ற புதிய அறிகுறிகள் இளவயதினரிடையே பரவலாகத் தோன்றுகின்றன.தொண்டை மற்றும் மூக்குப் பகுதிக களில் கண்டறிவதற்கு முன்பாகவே வைரஸ் விரைந்து நுரையீரலைத் தாக்கி விடுகின்றது.


டில்லி மருத்துவர் ஒருவர் இத்தகவல்களை உறுதிப்படுத்துகிறார்.
ஒக்சிஜன் தீர்ந்து போன மருத்துவமனைகளில் இருந்து தங்கள் அன்புக்குரியவர்களைத் தூக்கிக் கொண்டு உயிர்ப்பிச்சை கேட்டு எல்லா ஆஸ்பத்திரிகளுக்கும் அலைந்து கொண்டிருப்பவர்களை எங்கும் காண முடிகிறது.


“கொரோனா வைரஸ் என்னவெல்லாம் செய்யும் என்பதை இந்திய நிலைவரம் உணர்த்துகின்றது” என்று கூறி உலக சுகாதார நிறுவனம் உலக நாடுகளை எச்சரித்திருக்கிறது. அரசுகள் அவசரமாக சுகாதாரக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதும், பொதுமக்கள் மாஸ்க் அணிவது போன்ற சுகாதாரப் பழக்கவழக்கங்களை கைவிடுவதும் எத்தகைய ஆபத்துகளு க்கு இட்டுச்செல்லும் என்பதற்கு இந்தியாவை உதாரணமாகக் காட்டுகின்றது மருத்துவ உலகம்.


இந்தியர்கள் எவருமே எதிர்பாராத இந்த அவலம் ஏன் அங்கு உருவானது? அரசியல் நோக்குடன் குற்றங்களை முன்
வைப்போர், அறிவியல் ரீதியில் விவாதிப்போர் என இரண்டு பக்கத்தில் வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.


தலைநகர் உட்பட இந்திய நகரங்களில் கடந்த சில மாதகாலமாக விவசாயிகள் திரண்டு நடத்திய பேரணிகள், பல லட்சம் பக்தர்கள் கலந்து கொண்ட கும்பமேளா சமயப் பண்டிகை, முக்கிய மாநிலங்க ளில் ஆளும் கட்சி உட்பட அரசியல் கட்சிகள் மக்களைத் திரட்டி நடத்திய தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் போன்ற- சுகாதார
விதிகள் அறவே அலட்சியம் செய்யப் பட்ட சம்பவங்களைச் சுட்டிக்காட்டுவோர், வைரஸ் பரவல் இந்தளவுக்கு வேகமடை ந்தமைக்கு பொறுப்பற்ற இத்தகைய நடவடிக்கைகளே காரணம் என்று கூறுகின்றனர்.


ஆபத்தான இரட்டைத்திரிபு வைரஸ் பரவிவருவது தெரிந்து கொண்டும் சமூக இடைவெளி, மாஸ்க் என எதுவும் இன்றி பல
லட்சக் கணக்கானோர் வட இந்திய நகரமான ஹரித்துவாரில் கங்கை நதி ஓரம் திரண்டு தங்கள் பாவங்களைக் கழுவுகின்ற இந்து சமயச்சடங்கை நிறைவேற்றினர்.


கும்பமேளா மதச் சடங்கு நடைபெற்றஹரித்துவாரா நகரில் இருந்து திரும்பிய பிரபல இந்தி இசையமைப்பாளர் ஷ்ரவன் ரத்தோட் (Shravan Rathod) சில தினங்களில் வைரஸ் தொற்றுக்கு இலக்காகிப் பின்னர் உயிரிழந்தார்.


பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் போன்றோர் பல்லாயிரக்கணக்கான தங்கள் ஆதரவாளர்களுடன் நடத்திய தேர்தல் பிரசாரப் பேரணிகளில் சமூக இடைவெளி, மாஸ்க் என்று எதனையும் காணமுடியவில்லை.


தொற்றும் தன்மை மிக அதிகமாக உள்ள இரட்டைத் திரிபு வைரஸ் பரவிவருவது தெரிந்தும் பொது இடங்களிலும் தேர்தல் பரப்புரைகளிலும் மக்கள் கூடுவதைக் கட்டுப்படுத்தத் தவறியமையே தற்சமயம் வைரஸ் தொற்று சுனாமி போன்று தாக்குவதற்கு வழி வகுத்தது என்று குற்றஞ்சாட் டும் குரல்கள் எழுந்துள்ளன.


ஒப்பீட்டளவில் சுகாதாரக் கட்டமைப்புகள் சிறப்பாக இருந்த டில்லி போன்ற நகரங்க ளின் மருத்துவமனைகள் கூட நிலை குலையும் கட்டம் ஏற்பட்டிருப்பது கிராமப் புறங்களின் கதி என்ன என்பதை உணர்த்தப் போதுமானது.டில்லி கங்கா ராம் மருத்துவமனையில்(Sir Ganga Ram Hosp ital) 25 வைரஸ் நோயாளிகள் ஒக்சிஜன் இன்றி உயிரிழந்தனர் என்பதை பி. ரி. ஐ. செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது.


நாட்டின் தொலைதூரப் பகுதிகளுக்கு ஒக்சிஜன் விநியோகிப்பதற்கு இராணுவ விமானங்களையும் ரயில்களையும் அரசு ஈடுபடுத்தி வருகிறது. பல நாடுகள் இந்தியாவுக்கு உதவ முன்வந்துள்ளன. இந்தி
யாவுக்கு எந்த வகையில் உதவுவது என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக அமெ க்கா தெரிவித்துள்ளது.


ஐரோப்பா, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளே இரண்டாவது, மூன்றாவது அலைகளைச் சமாளிக்கத் திணறி வருகின்றன. அது தெரிந்தும் கூட இந்தியா, இலங்கை போன்ற நாடுகள் முதலாவது அலையோடு எல்லாம் முடிந்து விடும் என்ற மனநிலையில் இருந்தனவா என்ற கேள்வியைச் சிலர் எழுப்புகின்றனர்.


நிலைமையை அறிவியல் ரீதியாக மதிப்பிடுவோர் வேறு கருத்துக்களை முன்வைக்கின்றனர்.தடுப்பூசி ஏற்றுவது ஒருபுறம் நடந்தாலும் இந்தியச் சனத் தொகை ‘மந்தை எதிர்ப்புச் சக்தி’ என்ற ஒட்டுமொத்த நோய்க் காப்பைப் பெறுவதற்கு இன்னும் சிலபல
காலம் செல்லக்கூடும் என்பதால் அதற்குள் மேலும் மோசமான தொற்று அலைகள் நாட்டைத் தாக்கலாம் என்கின்றனர்.


உலகில் இரண்டாவது பெரிய சனத்தொகை கூடிய நாடு(1.3 பில்லியன்) என்ற வகையில் வைரஸ் திரிபுகள் மக்கள் சமூகங்கள் மத்தியில் புதிது புதிதாக உருவெடுக்கக் கூடிய வாய்ப்புகள் இந்தி யாவில் அதிகம் என்று நோயியலாளர்கள் கருதுகின்றனர். மிக அடர்த்தியான சனத்திரள்களிடையே நீண்ட காலம் பரவுகின்ற போதுதான் வைரஸ் தன்னைத் தக்க வைப்பதற்காகப் பல புதிய மரபு மாற்றங் களை எடுக்கின்றது. இது ஓர் இயற்கை யான உயிரியல் பண்புதான்.


பிறேசில், தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் கண்டறியப்பட்ட வலுவான வைரஸ் திரிபுகளின் தன்மை கொண்ட இரட்டைத் திரிபும் அதனைத் தொடர்ந்து மூன்று மரபுகளை வெளிப்படுத்துகின்ற
“முத்திரிபு” வைரஸ் கிருமியும் இந்திய மாநிலங்களில் பரவுவது உறுதிசெய்யப் பட்டுள்ளது. ஆனால் இன்றைய அவல நிலைக்கு வைரஸ் திரிபுகள் மட்டும் அல்ல பொறுப்பற்ற செயல்களும் தான் காரணம் என்று சர்வதேச உயிரியல் நிபுணர் டாக்டர் ஆனந்த் பன் (Dr Anant Bhan) தனது ருவீற்றர் பதிவில் கருத்திட் டுள்ளார்.


“தொற்று திடீரென அதிகரித்தமைக்கு வைரஸின் புதிய திரிபுகளோ மாறுபாடுகளோ காரணம் அல்ல. மக்களின் பொதுச் சுகாதார விடயங்களில் முடிவுகளை எடுப்போரின் திறமையின்மை,
பொறுப்பின்மை போன்ற திரிபுகளே இந்த நிலைமைக்குக் காரணம்” – என்று அவர் தனது பதிவில் குறிப்பிடுகிறார்.


இந்தியா போன்ற சன நெருக்கடி நிறைந்த நகரங்களையும் கீழ் நிலை சுகாதார வசதிகளையும் கொண்ட ஒரு நாட்டில் கொரோனா விதிகளைப் பேணுவதற்கு மக்களைக் கட்டாயப்படுத்தினாலும் தர்க்கரீதியில் அதற்கு வாய்ப்பு இல்லை என்று வேறு சிலர் கூறுகின்றனர். “சுகாதார விதிகளைப் பேணுமாறு இந்தியர்களை இறுக்க முடியாது. நகரங்களில் ஓர் அறைக்குள் ஆறுபேர் என்ற கணக்கில் வசிப்போரிடம் சமூக இடைவெளியை எங்கனம் பேணுவது?”


“.. சுமார் ஆயிரத்து முந்நூறு கோடி இந்திய மக்களையும் இரண்டு மீற்றர் இடைவெளியில் நிற்கச் சொன்னால் அவர்கள் அவ்வாறு நிற்பதற்கு முழு உலகமும் தேவைப்படும்”. இத்தகைய கருத்துக்களும் நிராகரிக்க முடியாதவை தான்.
(படங்கள் :ஹரித்துவாரில் கங்கைக் கரையோரம் கும்பமேளாவில் திரண்ட யாத்திரிகர்கள். *கொல்கத்தாவில் பாரதீய ஜனதாக் கட்சியின் தேர்தல் பரப் புரைக் கூட்டத்தில் மக்கள் கூட்டம்)

பாரிஸிலிருந்து..
குமாரதாஸன்.
25-04-2021

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More