வலி.வடக்கில் இராணுவத்தினரால் சுமார் 10 குடும்பங்களின் காணிகளை மீள கையகப்படுத்த இராணுவத்தினர் முயற்சித்துள்ளதாக வலி.வடக்கு மீள் குடியேற்ற தலைவரும் , பிரதேச சபை உறுப்பினருமான ச. சஜீவன் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில் ,
காங்கேசன்துறை மத்தி கிராம சேவையாளர் பிரிவில் கடந்த 27 வருட காலமாக உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து கடந்த 2018ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்ட காணிகளில் குறித்த பகுதியில் உள்ள சுமார் 10 குடும்பங்களுக்கு சொந்தமான காணியை இராணுவத்தினர் மீள கையகப்படுத்த முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த காணிகளின் உரிமையாளர்கள் , காணிகளை துப்பரவு செய்து பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் இரவோடு இரவாக இராணுவத்தினர் அக் காணிகளில் , “ இராணுவத்தினரின் கட்டுப்பாட்டினுள் உள்ள இப்பிரதேசத்திற்குள் அநாவசியமாக உட்பிரவேசிப்பது தடை செய்யப்பட்டுள்ளது” எனும் அறிவித்தல் பலகையை நாட்டியுள்ளனர்.
இது தொடர்பில் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை பிரதேச செயலருடன் நேரில் சந்தித்து பேசவுள்ளதாக தெரிவித்தார்.