கொரோனாவால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்குத் தடுப்பூசிகளை உடனடியாக வழங்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதியிடம் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்றின் 2 ஆவது அலை மிக வேகமாகப் பரவி வருகிறது. தொற்று பரவலைத் தடுப்பதற்கான முக்கிய ஆயுதமாகத் தடுப்பூசி பாா்க்கப்படுகிறது. மே 1 ஆம் திகதி முதல் 18 வயதைக் கடந்த அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதனால் கொரோனா தடுப்பூசிக்கான தேவை அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
சீரம் நிறுவனம் உற்பத்தி செய்து வரும் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கான மூலப்பொருள்களை அமெரிக்கா வழங்க வேண்டுமென இந்தியா கோரியிருந்தது. ஆனால், மூலப்பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கான தடையை நீக்க முடியாது என அமெரிக்கா அறிவித்திருந்தது.
அதை அடுத்து, இந்திய – அமெரிக்க அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அமெரிக்க நிா்வாகத்தின் முடிவுக்குக் கடும் எதிா்ப்பு தெரிவித்திருந்தனா். இதை அடுத்து கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்திக்கான மூலப்பொருள்கள் உடனடியாக இந்தியாவுக்கு வழங்கப்படும் என ஜனாதிபதி ஜோ பைடன் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரிசோதனைக் கருவிகள், செயற்கை சுவாசக் கருவிகள், தற்காப்பு கவச உடைகள் உள்ளிட்டவற்றையும் அமெரிக்கா அனுப்பி வைக்க உள்ளது.
பிரிட்டனின் அஸ்ட்ராஸெனகா நிறுவனத்திடம் இருந்து 30 கோடி கொரோனா தடுப்பூசிகளை வாங்குவதற்கு அமெரிக்கா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அந்த நிறுவன தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது.
இந்நிலையில் கொரோனாவால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்குத் தடுப்பூசிகளை உடனடியாக வழங்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டரில் பதிவில் “என்னுடைய இதயம் உடைகிறது. கொரோனாவால் இந்தியா பாதிப்படைந்துள்ளது. தன் தேவைக்கும் அதிகமான 550 மில்லியன் தடுப்பூசிகளை வாங்குவதற்கு அமெரிக்கா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. உலக நாடுகளுக்கு அஸ்ட்ராஸெனகா தடுப்பூசிகளை வழங்குவதற்கு நன்றி. ஆனால் என் நாட்டில் நிலைமை மோசமாக உள்ளது. நீங்கள் உடனடியாக இந்தியாவுக்குத் தடுப்பூசிகளை வழங்குவீர்களா எனக் கேட்டுள்ளார்.”