Home இலங்கை முஸ்லிம் செயற்பாட்டாளர்களை விடுவிக்க சர்வதேச மனுக்கள்!

முஸ்லிம் செயற்பாட்டாளர்களை விடுவிக்க சர்வதேச மனுக்கள்!

by admin

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை பயன்படுத்தி ஒரு வருடத்திற்கு முன்னர் கைது செய்யப்பட்ட இரண்டு முஸ்லிம் சிவில் செயற்பாட்டாளர்கள் வழக்குகளை நீக்கிக்கொள்வதற்காக, உலகெங்கிலும் உள்ள மக்களின் ஆதரவைக் கோரி சர்வதேச மன்னிப்புச் சபை இரண்டு மனுக்களை வெளியிட்டுள்ளது.

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, 2020 ஏப்ரல் முதல் குற்றச்சாட்டுகள் இன்றி தடுப்புப் காவலில் வைக்கப்பட்டுள்ளார், மேலும் 2020 ஏப்ரலில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற அரச அதிகாரியும் சமூக செயற்பாட்டாளருமான ரம்சி ராசிக் 2020 செப்டம்பரில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

மனித உரிமைகள் மற்றும் அரசியலமைப்பு குறித்த நன்கு அறியப்பட்ட சட்டத்தரணி ஹிஸ்புல்லா 2020 ஏப்ரல் 14ஆம் திகதி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

குற்றச்சாட்டு அல்லது விசாரணை எதுவுமின்றி ஒரு வருடம் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரது குடும்பத்தினர் அல்லது சட்டத்தரணிகளுக்கு அவரை அனுக அனுமதி வழங்கப்படவில்லை என மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

கைது செய்யப்படுவதற்கு ஒரு நாளுக்கு முன்னதாக, முஸ்லிம் மத நடைமுறைகளை மீறி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் சடலங்களை வலுக்கட்டாயமாக தகனம் செய்யும் அரசின் கொள்கைக்கு எதிராக அவர் ஒரு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்ட ஏற்பாடுகளின் சர்வதேச தரங்களுக்கு அமைய, இலங்கையின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் உள்ள முரண்பாடுகளை உணர்ந்து, அந்த சட்டத்தில் திருத்தங்களை செய்வதாக அரசாங்கம் உறுதியளித்திருந்த நிலையில், அவருக்கு எதிராக கருத்துச் சுதந்திரத்தின் கீழ் தவறாக செயற்பட்டமை தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவுள்ளதாக அறிவித்திருந்தது.

எனினும், அத்தகைய குற்றச்சாட்டு எதுவும் இதுவரை பதிவு செய்யப்படாமல், அவர் இந்த தருணம் வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா ஒரு வருடமாக தடுப்புக்காவலில் இருந்தபோதும், அவர் செய்த குற்றத்திற்கான நம்பகமான ஆதாரங்களை முன்வைக்க அதிகாரிகள் தவறியுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை கூறியுள்ளது.

இதேவேளை, சமூக ஊடகங்கள் மற்றும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகைகள் உள்ளிட்ட வெகுஜன ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடும் சமூக ஆர்வலர் ரம்சி ராசிக், ஏப்ரல் 9ஆம் திகதி குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

கொரோனா தொற்றுடன் இணைந்ததாக பரவிய பிரிவினைவாதத்தை தோற்கடிக்க, ‘ ஜிஹாத் சிந்தனைக்கு” தயாராக வேண்டும் என்ற அடிப்படையில் வெளியிட்ட கருத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை மற்றும் மற்றும் கணினி குற்றச் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் அவரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைக்கு அமைய சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பை கைவிட்டு, மாற்று கருத்தியலாளர்களை அடக்குவதற்கு அந்த சட்டத்தைப் பயன்படுத்துவதாக இலங்கை அரசு மீது சர்வதேச மற்றும் தேசிய ரீதியில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சமூக ஆர்வலர் ரம்சி ராசிக், உள்ளூர் மற்றும் சர்வதேச மனித உரிமை ஆர்வலர்களின் கடும் எதிர்ப்புக்களுக்கு மத்தியில், செப்டெம்பர் 17ஆம் திகதி, 161 நாட்கள் சிறைவாசத்திற்குப் பின்னர், உயர் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டார். ஸ்ரீ

அவர் பிணையில் விடுவிக்கப்பட்டபோதிலும், அவருக்கு எதிரான குற்றவியல் விசாரணை இதுவரை நிறைவு செய்யப்படவில்லை.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர் 10 வருடங்கள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை பாதுகாப்பதற்காக அன்றி அதனை கட்டுப்படுத்துவதற்காக சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையை, அரசாங்கம் துஷ்பிரயோகம் செய்த பல நிகழ்வுகளில் ரம்சி ராசிக்கின் நிகழ்வும் உள்ளடங்குவதாக மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை விடுவிக்கவும், ரம்சி ராசிக் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் கைவிடவும், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாவதை முடிவுக்குக் கொண்டுவரவும், இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக, சர்வதேச மன்னிப்புச் சபை மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

கீழேயுள்ள இணைப்புகள் ஊடாக நீங்களும் பங்களிப்பு வழங்கலாம்.

https://act.amnestyusa.org/page/79791/action/1?ea.tracking.id=ram2021sl2s

https://act.amnestyusa.org/page/79787/action/1?ea.tracking.id=ram2021sl1s
Attachments area

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More