பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தனது தனிப்பட்ட சொகுசு மாடிக்குடியிருப்பை மெருகூட்டுவதற்காக முறைகேடாக நிதி நன்கொடை பெற்றாரா? இவ்வாறு ஒரு புதிய சிக்கலில் பிரதமர் மாட்டிக் கொண்டுள்ளார் என்ற தகவலை இங்கிலாந்து ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
“11 டவுனிங் வீதி” முகவரியில் பிரித்தானியப் பிரதமரின் தனிப்பட்ட சொகுசு வதிவிடம் அமைந்துள்ளது. நாட்டில் முதல் தரமான அந்த வதிவிடத்திலேயே பொறிஸ் ஜோன்சன் தனது துணைவியாருடன் வசித்து வருகிறார். அதனைப் புதுப்பித்துமெருகூட்டும் வேலைகளுக்காக நிர்ணயிக்கப்பட்ட பராமரிப்புச் செலவுத் தொகையை விடப் பலமடங்கு நிதியை பிரதமர் பயன்படுத்தி உள்ளார் என்று சந்தேகிக் கப்படுகிறது.
அதற்கான ஆதாரங்களை அரச செலவுகளைக் கண்காணிக்கும் குழு ஒன்று கண்டறிந்துள்ளது.வதிவிட ஆடம்பர மெருகூட்டலுக்காகமொத்தம் £200,000 பவுன்ஸ் செலவு செய்யப்பட்டுள்ளமைக்கு ஆதாரங்கள் இருக்கின்றன என்று கூறப்படுகிறது.
ஆனால் நான்கு படுக்கை அறைகள் கொண்ட அந்த மாடிக் குடியிருப்பைத் திருத்தவோ தளபாடங்களை வாங்கவோ ஆண்டுதோறும் பிரதமருக்கு ஒதுக்கப்படுகின்ற நிதி £30,000 பவுன்ஸ் மட்டும்தான்.
எஞ்சிய செலவுத் தொகையைப் பிரதமர் எங்கிருந்து, எவ்வாறு பெற்றுக் கொண்டார்? அது கணக்குக் காட்டப்படாத ரகசிய நிதி அன்பளிப்பா? இவ்வாறான கேள்விகள் அரசியல் தரப்புகளில் கிளப்பப்பட்டு அவை பிரதமர் மீது கடும் அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளன.
“இந்த விவகாரத்தில் குற்ற முறைகேடு அல்லது முறைகேடுகள் இடம்பெற்றிருக்கலாம் எனச் சந்தேகிப்பதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன” என்று நிதிமோசடிகளைக் கண்காணிக்கும் குழு ஒன்று தெரிவித்துள்ளது. பூர்வாங்க விசாரணைகளையும் அது தொடக்கிஉள்ளது.
பிரதமர் தனது தனிப்பட்ட நிதியில் இருந்தே செலவுக்கான பணத்தைப் பயன்படுத்தினார் என்று அவரது அரசுப் பிரமுகர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.பிரதமரும் அதே கருத்தையே வெளியிட்டிருக்கிறார்.
—————————————————————
குமாரதாஸன். பாரிஸ்.28-04-2021