இந்திய வைரஸ் என்று அழைக்கப்படுகின்ற புதிய திரிபுக் கிருமி தொற்றிய நபர் ஒருவர் பிரான்ஸில் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்.
நாட்டின் தென் மேற்கே Lot-et-Garonne பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கே இந்திய வைரஸ் தொற்றி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
தொற்றுக்குள்ளான நபர் அண்மையில் இந்தியாவில் இருந்து திரும்பியவர் என்பது தெரியவந்துள்ளது. அவரது தொற்றுமாதிரிகள் துளுசில் உள்ள தொற்று நோய் ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்டு இந்திய வைரஸ் உறுதி செய்யப்பட்டிருப்பதாக Nouvelle-Aquitaine பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அந்த நபருடன் தொடர்புடைய எவருக்கும் வைரஸ் தொற்றியதாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. அவருக்கு தீவிர நோய் அறிகுறிகள் எவையும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
பிரான்ஸில் இந்தியத் தொற்றாளர்கள் எவரும் இன்னமும் கண்டறியப்படவில்லை என்று நாட்டின் சுகாதார அமைச்சர் உறுதி செய்து ஓரிரு தினங்களில் முதலாவது தொற்றாளர் அடையாளம் காணப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை – இந்திய வைரஸ் தொற்று உள்ளவர் எனச் சந்தேகிக்கப்படுகின்ற மற்றொரு நபரும் நாட்டின் தென்மேற்கு Bordeaux நகரில் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்.
ஆனால் அவருக்குத் தொற்றியது இந்தியத் திரிபுதானா என்பது இன்னமும் முழுமையாக உறுதி செய்யப்படவில்லை என்று சுகாதார அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.
இதுவரை இத்தாலி, இங்கிலாந்து, பெல் ஜியம் சுவிட்சர்லாந்து, கிறீஸ், உட்பட உலகெங்கும் 17 நாடுகளில் இந்திய வைரஸ் பரவி உள்ளது.
—————————————————————–
குமாரதாஸன். பாரிஸ்.29-04-2021