Home இலங்கை அனர்த்த, பேரனர்த்த நீக்கத்திற்கான வாழ்தலைப் பேசும் சுசிமன் நிர்மல வாசனது ஓவியஇயக்கம்! கலாநிதி சி.ஜெயசங்கர்.

அனர்த்த, பேரனர்த்த நீக்கத்திற்கான வாழ்தலைப் பேசும் சுசிமன் நிர்மல வாசனது ஓவியஇயக்கம்! கலாநிதி சி.ஜெயசங்கர்.

by admin

எந்தவகையிலான ஊடகங்களிலும், எந்த விதமான இடங்களிலும் ஓவியப்படைப்புக்களை காண்பியக்கலை ஆக்கங்களை உருவாக்கவும், காட்சிப்படுத்தவுமான இயல்பு சுசிமன் நிர்மாலவாசனுக்குரியது. அவரது படைப்பாக்கத்திற்கான கருவூலங்களான மக்களதும் சூழலினதும் இணைவைப் பேணுவதிலும் கவனம் கொண்டிருப்பதை அவருடைய ஓவியக் காட்சிப்படுத்தல்கள் புலப்படுத்தி நிற்கின்றன. அதேவேளை காலனியம் அறிமுகப்படுத்திய நவீன அறிவியலின் அம்சமான நவீன ஓவியம் வரிக்கின்ற ‘தராதரங்களிலும்’ தடம்பதித்தவராக ஆனால் அதனால் தீர்மானிக்கப்படாதவராக இயங்குவதையும் காணமுடிகின்றது.


நவீன ஓவிய உலகின் அதிகார அல்லது அங்கீகார பீடமாகக் கொள்ளப்படுகின்ற கலைக் கூடங்களில் காட்சிப்படுத்தலுக்கான அவாவற்ற இளம் ஆளுமையாக சுசிமன் நிர்மலவாசன் இயங்குவது மிகுந் தகவனத்திற்கும், கற்றலுக்கும் உரியது.


மேலும் ஓவியப் படைப்பாக்கம் என்பது சிறப்புத் தேர்ச்சி பெற்ற வல்லுனர்களது விடயம் மட்டுமல்ல, எல்லா மனிதருள்ளும் படைப்பாக்கத்திறன் உள்ளுறைந்து காணப்படுகின்றது என்ற நம்பிக்கை கொண்டவராகவும் நிர்மலவாசன் விளங்குகின்றார்.
சிறுவர்கள், இளையவர்கள், மூத்தோர்களுடன் இணைந்து ஓவிய, காண்பியக்கலை உருவாக்கங்களை முன்னெடுப்பது, காட்சிப்படுத்துவது என்பதும் நிர்மலவாசனது கலையாகவும் இருக்கின்றது.


காட்சிப்படுத்தல்களின் போது மீளுருவாக்கம் பெறும், விரிவாக்கம் பெறும், முழுமைபெறும் ஓவிய ஆக்கங்களது உரித்தாளராகவும் நிர்மலவாசன் விளங்குகின்றார். இந்தவகையில் படைப்பாக்க ஆதிக்கநீக்கம் பற்றிய சிந்தனைக்கான அறிவியல் வளமாக வாசனின் ஓவிய ஆக்கமுன்னெடுப்புக்கள் காணப்படுகின்றன.


இத்தகைய வித்தியாசமானதும் சிறப்புத்தன்மை வாய்ந்ததுமான இயக்கத்தின் மூலம் பற்றிச் சிந்திக்கும் பொழுது ஓவியர் அ.மாற்கு முன்வந்து நிற்கின்றார். முற்றுகைக் காலங்களிலும், பொருளாதாரத் தடைக்காலங்களிலும் பாடசாலைப் பிள்ளைகள் பயன்படுத்தும் ஓவியம் வரைதலுக்கான குறைந்தபட்ச ஊடகங்களோ வளங்களோ கிடைக்காத சூழலிலும் பால்மாப் பொருட்கள், பிஸ்கட்டுக்கள் பொதி செய்யப்பட்டு வரும் காட்போட் மட்டைகளில் கரித்துண்டுகளால் ஓவியங்கள் வரைந்து சுவர்களிலோ, வேலிகளிலோ தொங்கவிட்டு உரையாடல்களை உருவாக்கியவர் ஓவியர்அ.மாற்கு ஓவியர் அ.மாற்குவின் மாணவர்களும் இந்தவகையினரே ஓவியர் கமலா வாசுகியினது ஒவிய முன்னெடுப்புக்கள் இதன் தொடர்ச்சியும் விரிவாக்கமும் கொண்டவை. பெண்களுடன் இணைந்து கூட்டுக் கலை ஆக்கங்களை நிகழ்த்துவது காட்சிப்படுத்துவது உரையாடல்களை முன்னெடுப்பது என்பதாக இச் செயற்பாடுகள் காணப்படும். கைவிடப்பட்ட, சூழலுக்கு நட்பான பொருட்களைக் கையாண்டு காண்பியக்கலை ஆக்கங்களும், காட்சிப் படுத்தல்களும் நிகழ்த்தப்படும். இவை பொது அல்லது வெகுசன உரையாடலுக்கானதாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.

வன்முறைகளுக்கு உட்படுத்தப்பட்ட பெண்களுடன் இணைந்து உள ஆற்றுப்படுத்தலாகவும், உணர்வு வெளிப்பாடாகவும், எதிர்ப்புக் குரலாகவும் உருவாக்கப்பட்டு காட்சிப்படுத்தலுக்குக் கொண்டுவரப்படும் ஆக்கங்கள் பொது வெளிகளிலேயே உருவாக்கப்படும் ஆக்கங்கள் என்பவை வாசனது வித்தியாசமான உருவாக்கத்திற்கும் இயக்கத்திற்குமான முன்னோட்டங்களாக இருந்திருக்கின்றன.


இத்தகைய செயற்பாடுகளின் முக்கியமான முன்னெடுப்பாளராகவும் வாசனது இயக்கம் விரிவாக்கம் பெற்றிருக்கின்றது என்பதும்குறிப்பிடத்தக்கது.


கடலும், வயல்வெளியும், வாவியும், கண்ணாக் காடுகளும் சூழ்ந்த இயற்கைச் சூழலில் மனிதராலும் இயற்கையாலும் ஏற்பட்ட ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற பேரனர்த்தங்களின் சிதைவுகளிடை வாழ்தலைப் பேசுவதையும், அனர்த்த, பேரனர்த்த நீக்கத்திற்கான வாழ்தலைப் பேசுவதையும் வாசனது ஓவிய இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.


மூன்றாவது கண் உள்ளூர் அறிவுதிறன் செயற்பாடுகளுக்கான நண்பர்கள் குழாம், வன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியர் குழாம் என்பவற்றில் ஆழ்ந்த ஈடுபாடும் இயக்கமும் வாசனது பார்வையையும் நிலைப்பாட்டையும் தீர்மானித்திருக்கின்றது என்பதை அவரது ஓவியங்கள், ஓவிய ஆக்கமுறைமைகள் காட்சிப்படுத்தல் மற்றும் தொடர்பாடல் முறைகளில் கண்டு கொள்ளலாம்.


வாசனின் தேடல் அவரது கலைவாண்மையையும் ஆளுமையையும் தீர்மானித்திருக்கின்றது. கலைநிறுவன மொன்றிற் கூடாக எத்தகைய ஆளுமைகள் அல்லது பட்டதாரிகள் உருவாக்கப்படுகிறார்கள்? வாசனைப் போன்ற ஆளுமைகளைக் கலை நிறுவனங்களுக்கூடாக உருவாக்கமுடியுமா? முடியுமாயின் அதன்முறைமை எத்தகையதாக இருக்க வேண்டும், என்பவை முக்கியமான உரையாடலுக்குரியவை.
வாசனது ஓவியங்களில் மீன்களும், கருவாடும், கண்ணாக்காடும் முக்கிய இடம்பிடித்திருப்பவை. மனிதர்களின் அனுபவங்களைக், கதைகளை அவர்கள்வாழும் இயற்கைச் சூழலின் உருவங்கள், படிமங்கள் மூலம் முழுமை பெறச்செய்து படைப்பாக்கியுள்ளார்.
காட்சிப்படுத்தும் வெளியையும் ஒவிய ஆக்கங்களையும் இணைத்து நினைவு கூருதலூடாக ஓவியங்களாகக் கதைகளை எழுதுபவர் ஓவியர் சுசிமன் நிர்மலவாசன். பன்குடா வெளி கண்ணாடிப் போடியாரின் பாழடைந்த வீட்டில் காட்சிப்படுத்தப்பட்ட ஓவியங்கள் இதற்கு மிகச்சிறந்த உதாரணமாகும், நவீன ஓவியத்தின் அதிகார அல்லது அங்கீகார பீடமான ஓவியகூடங்களுக்குச் சவாலானதும் படிப்பினையுமான ஓவியக் காட்சிப்படுத்தலாக வாசனது ‘பன்குடாவெளி 90’ கண்ணாடிப் போடியாரின் பாழடைந்த வீட்டு ஓவியக் காட்சிப்படுத்தல் அமைகின்றது.

வன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியக் குழாத்தின் காட்சிப்படுத்தல்களின் நீட்சியாக இது அமைகின்றது.
கலை ஆக்கங்களின் வலிமைகலைக் காட்சிப்படுத்தல்களின் வலிமை அதிகாரமிக்க இடங்களில் அவை வைக்கப்படுவதில் அல்ல, அப்படைப்புகள் கிளர்த்தும், தொடர்புபடுத்தும், இணைக்கும் பல அனுபவங்களைக் கொண்டுவரும் சூழலையும் சூழ்நிலையையும் உருவாக்குவதில் தங்கியிருக்கிறது என்பதை மேற்படி காட்சிப்டுத்தல்கள் உணர்த்தி இருக்கின்றன.


இந்தவகையில் சுசிமன் நிர்மலவாசனின் நினைவுகோருதல் என்ற தலைப்பிலான 21 ஓவியங்களை உள்ளடக்கிய ஓவியக் காட்சிப்படுத்தல் அவரது இன்னொரு பரிமாணமாகக் காணப்படுகின்றது.


சிறுவயதில் அவரறிந்தகதைகள், அவர் விளையாடிய விளையாட்டுகள் அவர் வாழ்ந்த சுற்றம் சூழல் என்பவற்றிற்கு பின்னாளில் என்ன நடந்துவிட்டிருக்கிறது என்பதை அவரது சிறுபராயத்து நினைவுகள், சிறுபராயத்து வெளிப்பாட்டு முறைமைகள், சுற்றுச் சூழலும் சுற்றமும் என்பதாக ஓவியங்கள் சமகாலத்துக் கதைகளை வண்ணங்களின் வழி பேசுகின்றன.


இந்த ஓவியக்காட்சி 2021 ஏப்ரல் 29 முதல்தினமும் காலை 10.00 மணிதொடக்கம்; நள்ளிரவுவரை கொழும்பில் பரடைஸ் ரோட் கலரியில் இடம்பெற இருக்கின்றது.
இலங்கையின் சமகால ஓவியப் பின்புலத்தில் மிகவும் வித்தியாசமான ஓவியங்களின் காட்சியாக இது அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More