கொரோனா காலமாக இருப்பதால் பதவியேற்பு விழா எளிமையாக ஆளுநர் மாளிகையில் நடைபெறும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
செவ்வாய்கிழமையன்று அண்ணா அறிவாலயத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்றும் அன்றைய தினம் பதவியேற்புக்கான தேதி முடிவு செய்யப்படும் என்றும் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் ஞாயிறன்று வெளியானது. திமுக கூட்டணி கட்சி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. தனிப்பெரும்பான்மையுடன் திமுக அரியணையில் அமரப்போகிறது. காலை முதலே திமுக முன்னணியில் இருந்தது.
தேர்தல் வெற்றி முடிவுகள் தெரிந்த உடன் திமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் அறிவாலயத்தில் கூடினர். கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்த நிலையிலும் உற்சாகமாக பட்டாசுகளை வெடித்தும் கொண்டாடினர். கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் தனது வெற்றிச்சான்றிதழைப் பெற்றுக்கொண்டார்.
அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் வெற்றிச்சான்றிதழை வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் திமுகவிற்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
கருணாநிதி வழியில் ஆட்சி நடத்துவோம்..வாக்களிக்க தவறியவர்களுக்கும் பணியாற்றுவோம் – மு.க ஸ்டாலின் அப்போது மு.க. ஸ்டாலினிடம் பதவியேற்பு விழா எங்கே எப்போது நடைபெறும் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மு.க ஸ்டாலின், இன்னும் முழுமையாக சில தொகுதிகளில் வெற்றி நிலவரம் வராததால் வந்தவுடன் பதவியேற்பு இருக்கும் என்றார்.
செவ்வாய்கிழமையன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏ கூட்டம் நடைபெறும். ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா ஆடம்பர விழாவாக இல்லாமல் மிகவும் எளிமையாகவே இருக்கும். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஆளுநர் மாளிகையிலேயே தனது பதவியேற்பு விழா நடைபெறும். பதவியேற்பு விழாவிற்கான தேதியை எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தி அறிவிப்போம் என்றும் தேசிய தலைவர்களின் அறிவுரை கேட்டு செயல்படுவேன் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.