மு.க.ஸ்டாலின் இன்றையதினம் முதலமைச்சராக ஆளுனா் பன்வாரிலால் புரோகித் முன்னிலையில் பதவி ஏற்றுள்ளாா்.
சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றதுடன் தி.மு.க. 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மை பெற்றது.
இதையடுத்து சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் ஆளுனா் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியதைத்தொடர்ந்து முதலமைச்சராக பதவி ஏற்க வருமாறு ஆளுனா் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தார்.
இதைத்தொடர்ந்து இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுனா் மாளிகையில் எளிமையான முறையில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சராக பதவி ஏற்ற மு.க.ஸ்டாலினுக்கு ஆளுனா் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள அமைச்சரவையில் அவருடன் சேர்த்து 34 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் அமைச்சர்கள் அனைவரும் பதவி ஏற்றனர்.
விழாவில் திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள், நீதிபதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் என 700 பேர் கலந்து கொண்டனர்.
எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மக்கள் நீதி மய்யம் சார்பில் அக்கட்சியின் தலைவர் கமல் ஆகியோரும் பங்கேற்றனர்.