யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 18 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆகிய இரண்டு ஆய்வுகூடங்களில் 668 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 18 பேரும் கிளிநொச்சி, மன்னாரில் தலா ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 3 பேருக்கும் , யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 9 பேருக்கும் , தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஐவருக்கும், (அவர்களில் மூவர் பொலிஸ் உத்தியோகத்தர்கள்) , நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் தொற்றாளர்களுடன் முதல்நிலையத் தொடர்புடைய ஒருவருக்கும் என 18 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்குச் சென்ற ஒருவருக்கும் , மன்னார் பொது வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சைக்குச் சென்ற ஒருவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்