தமிழகத்தில் இன்றுமுதல் முடக்கநிலை அமுலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளதையடுத்து புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளார்.
அந்த வகையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 2 வாரங்களுக்கு முழுமுடக்கநிலை கடை பிடிக்கப்படும் என தமிழக அரசு சார்பில் நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களும் (சனி, ஞாயிறு) அனைத்து கடைகளையும் திறந்துவைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தநிலையில் இன்று முதல் முழு முடக்கம் அமுலுக்கு வந்துள்ளது. எதிா்வரும் 24ம் திகதி வரை 2 வாரங்களுக்கு இந்த முடக்கநிலை கடை பிடிக்கப்படும்.
அந்தவகையில் முழு முடக்கம் காரணமாக இன்று போக்குவரத்து சேவைகள் இடம்பெறவில்லை எனவும் பெரும்பாலான அரசஅலுவலகங்களும் இயங்கவில்லை எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது
வணிக வளாகங்கள், மதுபானக் கடைகள், அழகு நிலையங்கள், முடிதிருத்தும் கடைகள் , உடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள், கேளிக்கை பூங்காக்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தும் முழுமையாக மூடப்பட்டுள்ளன.
வழிபாட்டு தலங்களில் திருவிழா, குடமுழுக்கு நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்பதனால் பக்தர்கள் இல்லாமல் கோவில்களில் பூஜைகள் மட்டும் நடைபெற்றன.
அதேவேளை பால் வண்டிகள், பத்திரிகை வாகனங்கள், மருத்துவமனை வாகனங்கள், நோயாளா் காவுவண்டிகள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கான வாகனங்கள் மட்டும் வழக்கம் போல் இயங்கியதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
முலும் சென்னையில் 10 ஆயிரம் காவல்துறையினரும், தமிழகம் முழுவதும் 1 லட்சம் காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது