இலங்கையில் மிகவும் நெரிசலாக இருக்கும் சிறைச்சாலைகளில் கொவிட்-19 தொற்று விரைவாக அதிகரித்து பரவி வரும் நிலையில், அதை தடுக்க சர்வதேச தலையீடுகள் தேவை என்று சிறையிலுள்ளோர் உரிமைகளுக்கான முன்னணி அமைப்பு ஒன்று குரல் கொடுத்துள்ளது.
சிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு (சிபிஆர்பி) இது குறித்து சர்வதேச
செஞ்சிலுவைச் சங்கத்திற்கு (ஐசிஆர்சி) கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
கொடூரமான இந்த உயிர்க்கொல்லி வைரசின் தாக்கத்தால் இலங்கை சிறைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியையும்
பதற்ற சூழலையும் நேரில் வந்து காணுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக தெற்கு இலங்கையிலுள்ள ஒரு சிறைச்சாலையில் கைதிகள் அதிகாரிகள்
சுகாதார வழிமுறைகளை நடைமுறைப்படுத்த தவறிவிட்டனர் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதை அவர்கள் சுட்டிக்காட்டி அவர்களின் சிறப்பு கவனத்தை ஈர்த்துள்ளனர்.
“கடந்த சில வாரங்களாக சிறைகளில் அதிகரித்து வரும் கொவிட்-19 தொற்று அதிகரித்து வரும் நிலையில், சிறைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை உங்கள் கவனத்திற்கு கொண்டு
வருவதற்காக இதை எழுதுகிறோம். குறிப்பாக அங்குனுகொலபெலஸ சிறையில் கொவிட்
தொற்று காரணமாகப் பதற்றங்கள் அதிகரித்து கைதிகள் கூரை மீது ஏறி போராட்டங்களை நடத்துகின்றனர்` என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் இலங்கைப் பிரதிநிதிக்கு
எழுதியுள்ள கடிதத்தில் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அந்த கடிதத்தில் இலங்கைச் சிறைகளிலுள்ள நிலையும், கொவிட் தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளும் விரிவாக எழுதப்பட்டுள்ளன.
“கொவிட்-19 தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்டு பலவீனமான நிலையிலுள்ளவர்களில் சிறைக் கைதிகளே அதிகம் என்பதை நீங்கள் அறிவீர்கள். கொவிட் தொற்று பரவாமல்
இருப்பதைத் தடுக்க முக்கியமானதொரு முன்னெச்சரிக்கை சமூக இடைவெளியைப் பேணுவது, இது சிறையில் அளவுக்கும் அதிகமாக கைதிகள் இருப்பதால் இடநெருக்கடி காரணமாக இதைப் பேணுவது இயலாத ஒன்று.
மேலும் இங்கு போதிய சுகாதார வசதிகள் இல்லை, ஊட்டச்சத்தான உணவுக்கும் வழியில்லை. உடல் ஆரோக்கியப் பாதுகாப்பு
பலவீனமாக உள்ளவர்களை மேலும் பாதிக்கிறது“ என்பது உணரப்பட வேண்டும் என்று அந்தக் கடிதம் கவலை வெளியிட்டுள்ளது.
மேலும் இந்தக் கடிதத்தை எழுதியுள்ள சிபிஆர்பி அமைப்பின் தலைவரும் சட்டத்தரணியுமான சேனக பெரேரா சில ஆலோசனைகளையும் முன்வைத்துள்ளார்.
1. ஐசிஆர்சி அமைப்பு உடனடியாக அங்கு விஜயம் செய்து துரித கதியில் அங்குனுகொலபெலஸ சிறையிலுள்ள கைதிகளின் அச்சங்கள் குறித்த மதிப்பீடு ஒன்றைச் செய்ய வேண்டும்.
2. அதே போன்றதொரு மதிப்பீட்டை இதர சிறைகளிலும் மேற்கொள்ள வேண்டும்.
3. முடிந்த அளவுக்கு ஐசிஆர்சி, உடனடியாக நிவாரணம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எனினும் அதை அங்குள்ள கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதோடு மட்டும் நிறுத்தாமல், அங்குள்ளவர்களுக்கு தேவையான தனிப்பட்ட பாதுகாப்பு உடை மற்றும் உபகரணங்கள், கைகளைச் சுத்தம் செய்வதற்கு சானிடைசர்கள், சுகாதாரப் பராமரிப்புகள், போதியளவுக்கு ஊட்டச்சத்துடன் கூடிய உணவு, தொடர்பாடல் வசதிகள் போன்று வசதிகள் செய்து கொடுத்து சிறைச்சாலைகளில் கொவிட்-19
தொற்றுகள் பரவுவதைத் தடுக்கவும் கைதிகளின் அச்சங்களைப் போக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4. கைதிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு கொவிட்-19 தொற்றை தடுப்பதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளைத் தெரிவிப்பது.
5. அனைத்து சிறைச்சாலைகளுக்கும் விஜயம் செய்யும் திட்டமொன்றை ஐசிஆர்சி வகுக்க வேண்டும். குறிப்பாக சிறைச்சாலை மருத்துவர்கள் ஐசிஆர்சி மற்றும் உரிய அரச
அதிகாரிகளுக்கு நிலையை எடுத்துச் சொல்லி அவர்களின் கவனத்தை ஈர்த்து பிரச்சனைகளுக்குத் தீர்வு காண ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
கடந்த நவம்பர் மாதம் மஹர சிறைச்சாலையிலுள்ள கைதிகள் இந்தப் பெருந்தொற்றுக்கு எதிராக போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று கூறி போராட்டம்
நடத்திய போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டு நூற்றுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.
இலங்கைச் சிறைகள் தற்போதுள்ள நிலை குறித்து மேலும் விவாதிக்க ஐசிஆர்சியுடன் ஒரு கூட்டமொன்றையும் அவர் வேண்டியுள்ளார்.