கொரோனா தொற்றுநோய் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள இந்த காலங்களில் கர்ப்பிணித் தாய்மார் ஏன் அதிக கவனமாக இருக்க வேண்டும்? என்பது தொடர்பில் சுகாதார மேம்பாட்டு பணியகம் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
நீங்கள் கர்ப்பிணி மற்றும் உங்கள் பிறக்காத குழந்தையின் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. கொரோனா பரவல் அதிகரித்துள்ள இந்த நேரத்தில் சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிப்பது மற்றும் சரியான சுகாதார ஆலோசனைகள் மற்றும் சேவைகளைப் பெறுவது அவசியம் என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஒரு கர்ப்பிணித் தாய் அவசர தேவையைத் தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது, ஏனெனில் அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளானால் அதிக சிக்கல்கள் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகமாக காணப்படுகின்றது.
கர்ப்பிணிப் பெண் ஒருவர் வைத்தியசாலைக்கு அல்லது சிகிச்சையகத்திற்கு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டால், கொரோகா தொற்றை தவிர்க்க பின்வரும் குறிப்புகளை கண்டிப்பாக பின்பற்றவும்.
1. காற்றோட்டம் குறைவாக உள்ள பகுதிகளில் இருப்பதை குறைத்தல்;
2. எப்போதும் முகக்கவசத்தை சரியாக அணிதல்
3. நபர்களுடான இடைவெளியை சரியாக பின்பற்றல்.
4. இறுதிச் சடங்குகள் போன்ற பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ளாதிருத்தல்
5. சவர்க்காரம் மற்றும் தண்ணீரில் கைகளை அடிக்கடி கழுவுதல்.
கொரோனா நோயைப் பற்றிய அச்சம் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்கு தவறாமல் அணுகுவதில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாமதம் கர்ப்பிணி தாய் மற்றும் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.
கொரோனா ஆபத்து அதிகரிக்கும் போது, வழமைப் போல் சுகாதார சேவையை வழங்குவதில் சில சிக்கல்கள் இருக்கலாம். எனவே, இன்று அந்த சேவைகளை எவ்வாறு பெறுவது என்பதை அறிய உங்கள் வைத்திய அதிகாரி அல்லது குடும்பநல சுகாதார சேவை அதிகாரியைத் தொடர்பு கொள்ளுங்கள்.
ஆபத்து அறிகுறிகள்
“கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய ஆபத்து அறிகுறிகள்” பற்றி நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கலாம். அவற்றை மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்தினால், காய்ச்சல், இரத்தப்போக்கு, கடுமையான தலைவலி, மூச்சுத் திணறல், பார்ப்பதில் சிரமம், வலிப்பு, மார்பு/வயிற்று வலி, உடலின் வீக்கம், குழந்தை துள்ளுவதில் குறைவு அல்லது வேறு ஏதேனும் கடுமையான அசௌகரியங்கள் ஆகியன எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். அத்தகைய எச்சரிக்கை அறிகுறி எழுந்தால், உடனடியாக வைத்தியசாலைக்குச் செல்லுங்கள். இது குறித்து உங்கள் குடும்பநல சுகாதார சேவை அதிகாரிக்கு அறிவியுங்கள்.
கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் இருக்க வைத்தியசாலைகளில் அவசியமான நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளன. எனவே, தேவையான வைத்திய சிகிச்சையைப் பெற கர்ப்பிணிகள் தயங்க வேண்டிய அவசியமில்லை.
உங்கள் குடும்ப உறுப்பினர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தால் அல்லது ஒரு கொரோனா என சந்தேகிக்கப்படும் ஒருவர் வீட்டில் தங்கியிருந்தால், உடனடியாக உங்கள் குடும்பநல சுகாதார அதிகாரியிடம் தெரிவிக்கவும். உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த, முடிந்தவரை அவளிடமிருந்து (அவரிடமிருந்து) விலகி இருங்கள்.
எப்படியிருந்தாலும், உங்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால், உடனடியாக உங்கள் குடும்பநல சுகாதார அதிகாரியிடம் தெரிவிக்கவும். தேவைக்கேற்ப உடனடி சிகிச்சையை நாடுங்கள். வைத்தியசாலை அமைப்பு உங்களுக்காக தயாராக வைக்கப்பட்டுள்ளது.
இந்த அனைத்து நிகழ்வுகளிலும் நீங்கள் சிறிது மன அழுத்தத்தை உணரலாம். அதைத் தவிர்க்க, எப்போதும் நிதானமாகவும் தெளிவாகவும் இருக்க முயற்சி செய்யுங்கள்.
எந்த நேரத்திலும் உங்கள் குடும்பநல சுகாதார அதிகாரியையோ அல்லது 1999 என்ற சுவசெரிய சுகாதார சேவைக்கோ அழைத்து வைத்தியர் ஒருவருடம் உங்கள் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடலாம்.