தொற்றுநோயை நிர்வகிப்பது குறித்து சுகாதாரத் துறை மற்றும் தொடர்புடைய தொழிற்சங்கங்கள் வெளியிட்ட கருத்துக்களை புறக்கணிப்பதாக அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் கொவிட் தொற்று இறப்புகளின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் உயரும் அபாயம் காணப்படுவதாக இலங்கையின் உயர் வைத்திய நிபுணர்கள் ஒருமித்த குரலில் எச்சரித்துள்ளனர்.
சுகாதாரத் துறையில் நன்கு அறிந்த தொழிற்சங்கங்களால் சுதந்திரமாக தொழில்சார் கருத்துக்களை வெளியிடுவதற்கு அரசாங்கம் தடையாக அமைந்துள்ளதாக,
20 பொது மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பொது சொத்து மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
தொற்றுநோய் பரவுவதைத் தடுக்கவும், மக்களின் உயிரைப் பாதுகாக்கவும் நிலைமையைப் புரிந்துகொள்வதற்கும் அனைத்து தரப்பினரின் ஆதரவையும் பெறுவது அரசாங்கத்தின் பொறுப்பாக காணப்பட்டாலும், அரசாங்கம் தன்னிச்சையாக செயற்படுவதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டுகிறது.
தொற்றுநோயை நிர்வகிக்க அரசாங்கம் சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டும் என, அமைப்பின் இணை இணைப்பாளர் ரஞ்சன் சேனாநாயக்க வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
“பொது மற்றும் தனியார் துறைகளில் உள்ள சுயாதீன தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எங்கள் அமைப்பு, நாட்டின் பெரும்பான்மையான உழைக்கும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது, மேலும் அவர்கள் மாத்திரமல்ல, நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் பாதுகாப்பிற்காகவும் எப்போதும் முன்நிற்கிறது.”
எனவே, இந்த முக்கியமான கட்டத்தில், கொவிட்-19 தொற்றுநோயை நிர்வகிக்க சரியான தீர்மானங்களை எடுக்குமாறு அரசாங்கத்தை வற்புறுத்தும் பொது சொத்து மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு, ஏழு திட்டங்களை அரசாங்கத்திற்கு சமர்ப்பித்துள்ளது.
01 – இதுவரை நாட்டின் நான்கு முன்னணி வைத்திய சங்கங்கள் முன்வைத்த திட்டங்களை உடனடியாக செயல்படுத்துதல்.
02- பொது சுகாதார பரிசோதககர்கள் சங்கம், வைத்திய ஆய்வுகூட தொழில் நிபுணர்கள் சங்கம், பொது சேவை ஐக்கிய தாதியர் சங்கம் மற்றும் சுகாதாரத் துறையில் உள்ள பிற தொழில்சார் சங்கங்கள் முன்வைத்த விடயங்களில் கவனம் செலுத்துங்கள்.
03 – சுகாதாரத் துறையில் உள்ள தொழிற்சங்கங்கள் முன்வைக்கும் விடயங்கள் குறித்து அவதானம் செலுத்துவதற்கு பதிலாக அவர்களின் தொழிற்சங்கத்தையும் சுதந்திரமான பேச்சையும் அடக்குவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துதல்.
04 – வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த நாட்டில் தற்காலிக பயணக் கட்டுப்பாடுகளை உடனடியாக விதித்தல்
05 – வைரஸைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பணியான தடுப்பூசி வழங்கலை மேற்கொள்ளும்போது, உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களுக்கு அமைய ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் நியாயமான நடைமுறைகளுக்கு இணங்க செயற்படுதல்.
06 – நோய் பரவுவதால் உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அனைத்து துறைகளிலும் தொழிற்சங்கங்களின் பங்களிப்புடன் தொழில் அமைச்சர் தலைமையில் ஒரு விசேட செயலணியை அமைத்தல்.
07 – உழைக்கும் மக்கள் பணிக்கு சமூகமளிக்கக்கூடிய பேருந்துகள் மற்றும் ரயில்கள் போன்ற பொதுப் போக்குவரத்து சேவைகள் இடம்பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளமையால், பாதுகாப்பான பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே இதற்கு விரைந்து நடவடிக்கை எடுத்தல்.
சுகாதாரத் துறையின் ஆலோசனையைப் புறக்கணித்து, செயற்படும் பட்சத்தில், அடுத்த மூன்று வாரங்களிலும் அதற்கு பின்னரும் கொரோனா தொற்று இறப்புக்கள் அதிகரிப்பதை தவிர்க்க முடியாத என, இலங்கை வைத்திய சங்கம், இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், வைத்திய நிபுணர்கள் சங்கம் மற்றும் இலங்கை வைத்திய சங்கத்தின் இடைக் கல்லூரிக் குழு ஆகியன இணைந்து எச்சரிக்கை விடுத்துள்ளன.
“கொரோனாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை முன்னர் இல்லாத அளவிற்கு உயர்வதோடு, எதிர்காலத்தில் மரணம் ஒரு தேசிய பேரழிவாக மாறும் அபாயமாக மாறக்கூடும்” என வைத்தியர்களின் அமைப்பு ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.
தொற்றுநோய் பரவுவதை கட்டுப்படுத்த உடனடியாக செயற்படுத்தப்பட வேண்டுமென வைத்திய சங்கங்கள் ஏழு பரிந்துரைகளை அரசுக்கு அளித்துள்ளன.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட கொவிட் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, மக்களது நடமாட்டத்தை கட்டுப்படுத்த கடுமையான விதிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.
தொற்றாளர்களின் எண்ணிக்கைத் தொடர்பிலான விஞ்ஞானப்பூர்வமான தகவல்களுக்கு அமைய தெரிவு செய்யப்பட்ட இடங்களை முடக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதோடு தேவையேற்படும் பட்சத்தில் மாவட்டங்களுக்கு இடையிலான மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
கொரோனா தொற்று பற்றிய தீவிர கண்காணிப்பு மற்றும் நோய்த்தவிர்த்து மூலோபாயங்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமென்பதோடு, அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அறிகுறிகள் அற்ற தொற்றாளர்களை வீடுகளில் தங்கவைப்பதுடன், சுகாதார துறையின் கண்காணிப்புடன் குடும்பங்களை வீடுகளில் தனிமைப்படுத்த அனுமதி வழங்கப்பட வேண்டும்.
கட்டில்கள், ஒட்சிசன் உள்ளிட்ட முக்கிய விடயங்களில் போதுமான விநியோகத்தை உறுதிப்படுத்துவதன் மூலம், குணப்படுத்தல் துறையை வலுப்படுத்த வேண்டும்.
தொற்றாளர்களை விரைவாக அடையாளம் காணும் வகையில், பிசிஆர் பரிசோதனைளை நாடளாவிய ரீதியில் விஸ்தரித்து தடங்கல் இல்லாத பரிசோதனையை நடவடிக்கையை உறுதிப்படுத்த வேண்டும்.
நாடளாவிய விரைவான மற்றும் பரந்தளவிலான தடுப்பூசி வழங்களை உறுதிப்படுத்த வேண்டும்.
கொரோனா தொற்றுநோயை நிர்வகிப்பதில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய சரியான முகாமைத்துவ நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் நாட்டில் ஒரு பேரழிவு நிலைமை ஏற்படுவதை தவிர்க்க முடியாது என பொது சொத்து மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை வங்கி ஊழியர் சங்கம், இலங்கை வர்த்தக மற்றும் தொழில் மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கம், ஊடகவியலாளர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு, ஐக்கிய தொழிலாளர் கூட்டமைப்பு, தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம், இலங்கை நிபுணத்துவ ஊடகவியலாளர்கள் சங்கம், ஐக்கிய பொது சேவை சங்கம், வணிக மற்றும் தொழில்துறை தொழிலாளர் சங்கம், காப்புறுதி ஊழியர் சங்கம், தகவல் மற்றும் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு பணியாளர் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை தோட்ட சேவைகள் சங்கம், ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு, தொலைத்தொடர்பு பொறியியல் டிப்ளோமாதாரிகள் சங்கம் , உணவு, பானம் மற்றும் புகையிலை தொழிலாளர் சங்கம், தேசிய சுதந்திர தொழிற்சங்கம், அரச அச்சு தொழிலாளர் சங்கம், இலங்கை பெருந்தோட்ட சேவைகள் சங்கம், நிலம் மற்றும் விவசாய சீர்திருத்த இயக்கம் ஆகிய 20 அமைப்புகள், பொது சொத்து மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பில் அங்கம் வகிக்கின்றன.