இலங்கையில் தடுப்புக் காவலில் இருந்த 25 வயது நபரை காவற்துறையினர் சுட்டுக் கொன்றுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டி உள்ளதோடு கடுமையாகக் கண்டித்துள்ளன.
அந்த செயல் சட்டவிரோதக் கொலை என சிறைக் கைதிகளின் உரிமைகளுக்கான அமைப்பு கூறியுள்ளது.
கடந்த எட்டு ஆண்டுகளாக தடுப்புக் காவலில் இருந்த மாபுலகே தினித் மெலன் மாபுல, தென் மாகாணத்திலிருந்து வெள்ளை வாகனம் ஒன்றில் அழைத்துச் செல்லப்பட்ட ஒரு நாளுக்குப் பின்னர் கொழும்பின் புறநகர் ஒன்றில் கொல்லப்பட்டுள்ளார்.
அவர் கொல்லப்படுவதற்கு முதல் நாள் அவரது பெற்றோர் தங்களது மகன் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் காணாமல் போயுள்ளார் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் அளித்தனர்.
மிரட்டி பணம் பறிப்பது மற்றும் இதர குற்றங்களுக்காகத் தேடப்பட்டவர் ஊரு ஜுவ என்றழைக்கப்பட்ட மெலன் மாபுல தேடப்பட்டு வந்த நிலையில், அவர் நவகமுவவில் ஒரு சம்பவத்தில் காவற்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்
என காவற்துறைப் பேச்சாளர் அஜித் ரோஹன கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடந்த ஓராண்டுக்கும் குறைவான காலத்தில் ஒன்பது பேர் காவற்துறைக் காவலில் இருக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அவ்வகையில் நவகமுவவில் இடம்பெற்றுள்ள இரண்டாவது சம்பவம் இவரது படுகொலையாகும்.
தடுப்புக் காவலில் இருந்தவரை ஆயுதங்களைப் பதுக்கி வைத்துள்ள இடங்களைக் காட்டுவதற்கு கூட்டிச் சென்ற போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் அவர் கொல்லப்பட்டார்
என்று காவற்துறைத் தரப்பு கூறுகிறது.
நவகமுவ காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக இருந்த தினேஷ் அத்தரகமவின் கட்டுப்பாட்டிலேயே இருந்தார் என்று நம்பத்தகுந்த தகவல் தம்மிடம் உள்ளதாக ஜேடிஎஸ்
ஊடக அமைப்பு கூறுகிறது.
இந்தக் கொலைக்கு நவகமுவ காவல் நிலையப் பொறுப்பதிகாரியே பொறுப்பேற்க வேண்டும்
என்று சிறைக் கதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் இணை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் நந்திமல் சமூக வலைதள பதிவொன்றில் கூறியுள்ளார்.
கடந்த 10/5/2021 அன்று மெலம் மாபுலவின் பெற்றோரிடம் அவர் தென் மாவட்டமான காலியிலுள்ள பூசா தடுப்பு மையத்திலிருந்து பிணையில் விடுவிக்கப்படுவார் என காவற்துறையால் தெரிவிக்கப்பட்டது. எனினும் மாபுலவின் பெற்றோர் மதியம் அங்கு சென்ற போது அவர்களின் மகன் வெள்ளை வான் ஒன்றில் அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக பெற்றோர் இலங்கை மனித உரிமைகள் ஆணையக் குழுவிடம் தங்களது மகன் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு ஒன்றைச் செய்தனர்.
அடுத்த நாள் மே 11ஆம் திகதி காவற்துறையினர் அவரது பெற்றோரை நவகமுவ காவல் நிலையத்திற்கு வந்து அவரை பிணையில் கூட்டிச் செல்லுமாறு கூறினர். அவர்கள் சட்டத்தரணி ஹர்ஷிக சமரநாயக்கவுடன் இரவு 9 மணியளவில் காவல் நிலையம் சென்ற போது உள்ளே அனுமதிக்கப்படவில்லை. துணை காவற்துறை அத்யட்சகர் மெலன் மாபுல பொறுப்பதிகாரியுடன் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்
என்று கூறினார்.
அடுத்து என்ன நடக்கும் என்ற அச்சம் மற்றும் கவலை காரணமாக குடும்பத்தார் நடுநிசியிலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் அவசர எண்களில் தொடர்பு கொள்ள முயன்றனர்.
எனினும் எந்த உதவியும் கிடைக்கப் பெறுவதற்கு முன்னர், அவர்களது மகன் கொலை செய்யப்பட்டுள்ளதாக வானொலியில் கேட்டனர்.
இதையடுத்து இச்சம்பவம் குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறைக் கைதிகளைப் பாதுகாக்கும் குழு அறிவித்துள்ளது.