முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இராணுவத்தினர் மற்றும் காவற்துறையினர் குவிக்கப்பட்டு இருந்த நிலையில், நினைவுத் தூபி உடைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இம்முறை புதிதாக நாட்டுவதற்காக கொண்டு வரப்பட்டிருந்த 6.5 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட பொது நினைவுக்கல்லும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் நேற்றைய தினம் புதன்கிழமை ஆரம்பமான நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நாட்டுவதற்காக பொது நினைவுக்கல் நேற்றைய தினம் நினைவு முற்றம் பகுதிக்கு கொண்டு வரப்பட்டது.
அதனை அடுத்து அப்பகுதியில் இராணுவத்தினர் மற்றும் காவற்துறையினர் குவிக்கப்பட்டு நினைவுக்கல் கொண்டு வந்தவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
அந்நிலையில் நேற்று இரவு முழுவதும் இராணுவ மற்றும், காவற்துறை குவிக்கப்பட்டு நினைவு முற்றம் பகுதிக்கு எவரும் உட்செல்ல முடியாதவாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இன்றைய தினம் காலை அப்பகுதிக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பை சேர்ந்தவர்கள் சென்ற போது நினைவு முற்றத்தில் இருந்த நினைவு தூபி அடித்து உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.