பிரபல பாதாள உலகக் குழுத் தலைவரான “கொஸ்கொட தாரக” என்று அழைக்கப்படும் தாரக பெரேரா விஜேசேகர இன்று (13) காலை காவற்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
மீரிகமவில் வைத்து இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
மேல் மாகாண வடக்கு குற்றவியல் பிரிவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டிருந்த அவரை இன்று (13.05.21) அதிகாலை மீரிகம, ரேந்தபொல பிரதேசத்திற்கு விசேட நடவடிக்கை ஒன்றிக்காக அழைத்துச் சென்றிருந்ததாக காவற்துறை ஊடக பேச்சாளரும் பிரதி காவற்துறைமா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதன்போது, ஏற்பட்ட சம்பவம் ஒன்றில் காவற்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 34 வயதுடைய சந்கேகநபர் மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் காவற்துறை பரிசோதகர் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில், அவர் வத்துபிடிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, காவற்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேக நபரின் மரணம் தொடர்பாக விசேட விசாரணை ஒன்று மேல் மாகாண வடக்கு பிரதி காவற்துறையின மா அதிபரின் மேற்பார்வையின் கீழ் இடம்பெறவுள்ளது.
குறித்த சந்தேகநபர் கொஸ்கொட, மாத்தறை, மொரடுவை மற்றும் கொட்டாவை ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற 7 கொலைகள் மற்றும் 21 கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபராவார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு மாத்தறை நகரில் தங்க ஆபரண விற்பனை நிலையம் ஒன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்திற்கு குறித்த நபர் தலைமை தாங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது பொலிஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.