நீண்ட காலமாக துப்பரவு செய்யாமல் காணப்பட்ட வெள்ள வடிகாலினை கடந்த மார்ச் மாத கால பகுதியில் யாழ்.மாநகர சபை துர்வாரியது. அந்நிலையில் மீண்டும் குறித்த வடிகாலினுள் மதுபான ரின்கள் , பிளாஸ்ரிக் கழிவுகள் என்பவற்றை பொறுப்பற்ற தனமாக வீசி வந்தமையால் , மீண்டும் வடிகால் குப்பைகள் நிறைந்து காணப்பட்டன. அவற்றை இன்றைய தினம் மீண்டும் மாநகர சபை ஊழியர்கள் துப்பரவு செய்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் தனது முகநூலில் ஆதங்க பதிவொன்றினை இட்டுள்ளார்.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ,
கடந்த மார்ச் மாதம் யாழ் நகர் பகுதியில் காணப்படும் பிரதான வெள்ள வடிகாலினை மிக நீண்ட காலத்திற்கு பிற்பாடு என்பதும் அச் செயற்பாடு அனைவரினதும் கவனத்தை ஈர்த்தமையும் பலர் பாராட்டுதல்களைத் தெரிவித்தமையும் நடந்து முடிந்த விடயம்.
ஆனால் வெறும் இரண்டு மாதங்களில் அவை மீண்டும் பிளாஸ்ரிக் போத்தல்களினாலும் மதுபான ரின்களாலும் குப்பைகளாலும் நிறைந்திருந்தன.
சில சமூகப் பொறுப்பற்றவர்கள் மாறாத இந்த பழக்க வழக்கங்களைக் கொண்டிருக்கையில் நாம் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றோம் என்பதும் வேதனையான விடயம்.
அவர்கள் இச் சமூகத்தில் தங்களுடைய வகிபாகத்தினை மறந்திருக்கலாம் ஆனால் யாழ்.மாநகர சபை இயலுமானவரை பொறுப்புடனேயே பணியாற்றும்.
அந்தவகையில் மீண்டும் இன்று அவ் வடிகால் கழிவுகள் அகற்றப்பட்டன. நாம் இன்று இப்படி இருப்பதற்கு நாமே பொறுப்பு . இனி எப்படி இருக்க போகின்றோமோ அப்படி நம்மை நாமே மாற்றிக்கொள்ளும் ஆற்றலும் நம்மிடமே உள்ளது என்பது சுவாமி விவேகானந்தரின் கருத்து. ஆக அந்த ஆற்றலைக் கொண்டு எம்மைநாமே மாற்றிக் கொண்டால் மாத்திரமே மாநகரத்தின் தூய்மையும் சாத்தியமாகும். என குறிப்பிட்டுள்ளார்.