பலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் அனைத்துக்கும் பாரிஸ் காவல்துறை தலைமையகம் தடை விதித் திருக்கிறது.பொது ஒழுங்கு மற்றும்அமைதிக்குப் பங்கம் ஏற்படலாம் எனக் கருதியே தடை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இஸ்ரேல் – காஸா இடையே கடந்த சில தினங்களாக மோதல்கள் வெடித்துள்ளன.அது பெரிய அளவிலான போராக மாறக்கூடிய நிலைமைகள் தென்படுகின்றன.
இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து உலகெங்கும் பலஸ்தீன ஆதரவுப் போராட்டங்கள் நடை பெற்றுவருகின்றன. பாரிஸ் நகரில் சனிக்கிழமை ஏற்பாடாகி உள்ளபேரணிகளுக்கு காவல்துறை தலைமையகம் தடைவிதித்திருக்கிறது.
2014 இல் இஸ்ரேல் – பலஸ்தீன போரின் போது பாரிஸில் ஆர்ப்பாட்டங்களில் ஏற்பட்ட குழப்பங்களைக் கவனத்தில் கொண்டேஅதிகாரிகள் கட்டுப்பாடுகளை விதிக்கத் தீர்மானித்துள்ளனர்.
அதற்கான உத்தரவுகள் காவல்துறை தலைமையகத்துக்கு வழங்கப்பட்டிருப்பதாக உள்துறைஅமைச்சு தெரிவித்துள்ளது.
பாரிஸில் கடந்த புதனன்று காவல்துறை தடை உத்தரவை மீறி பேரணியை நடத்த முயன்றவேளை பலஸ்தீன மக்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் கைது செய்யப்பட்டுத் தடுத்துவைக்கப் பட்டார்.
இதேவேளை – இஸ்ரேல் – காஸா மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ராஜீக முயற்சிகள் தொடங்கி உள்ளன. அதிபர் எமானுவல் மக்ரோன் இன்று வியாழக்கிழமை பலஸ்தீன அதிபர் முஹமட் அப்பாஸுடன் தொலைபேசியில் உரையாடி உள்ளார் என்று எலிஸே மாளிகை தெரிவித்துள்ளது.
அடுத்து வரும் நாட்களில் அவர் இஸ்ரேலியப் பிரதமர் உட்பட மத்திய கிழக்கு தலைவர்களுடனும் பேச்சுநடத்தவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மோதல்களில் சிக்கி உயிரிழந்த பலஸ்தீனியர்களுக்கு மக்ரோன் தனது இரங்கலை வெளியிட்டுள்ளார். அதேவேளை இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கத்தினால் உரிமை கோரி நடத்தப்பட்ட தாக்குதல்களை பிரான்ஸ் அரசு வன்மையாகக் கண்டித்துள்ளது.
காஸா பிராந்தியத்தின் மீது இஸ்ரேலியப்படைகளும், பதிலுக்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கமும் மாறிமாறி நடத்திவரும் குண்டுத் தாக்குதல்களில் கடந்தநான்கு நாட்களில் 84 க்கும் மேற்பட்டோர்உயிரிழந்துள்ளனர்.
——————————————————————
குமாரதாஸன். பாரிஸ்13-05-2021