தொற்றுநோய்க்கு எதிரான சட்டங்களை மீறுபவர்களை கைது செய்யும் போது அனைவரையும் சமமாக நடத்த வேண்டுமென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கை காவல்துறைமா அதிபரிடம் கோரியுள்ளது.
பொலிஸ் துறைக்கு பொறுப்பான அமைச்சர் முகக்கவசம் அணியாமல் கூட்டங்களில் பங்கேற்றமை குறித்து சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜகத் பாலசூரிய, காவல்துறை மாஅதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர அண்மையில் அவரது அமைச்சுடன் தொடர்புடைய கூட்டத்தில் கலந்து கொண்டபோது முகக்கவசத்தை அணிந்திருக்கவில்லை.
இதுத் தொடர்பிலான புகைப்படத்தை அமைச்சரின் ஊடகப் பிரிவே ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்தத விடயத்தை மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த சில நாட்களாக, தமது பொறுப்புகளை புறக்கணித்து, அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பொது மக்கள் கைது செய்யப்பட்டு பேருந்துகளில் ஏற்றி செல்லப்பட்டமை குறித்து பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியான விடயத்தை மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
காவல்துறை மாஅதிபருக்கு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜகத் பாலசூரிய அண்மையில் (மே -11) எழுதிய கடிதத்தில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, கொரோனா தொற்றுநோய் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்த சட்ட மீறல்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள், அவசரகாலத்தில் கூட சட்டபூர்வமானதாகவும் அனைவருக்கும் சமமானதாகவும் இருக்க வேண்டுமென ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியமைத் தொடர்பில் இதுவரை சுமார் 9,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் அஜித் ரோஹண தெரிவித்திருந்தார்.
1996ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களுக்கு அமைய, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, காவல்துறை மாஅதிபருக்கு மூன்று பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
- கைதுகள் தொடர்பான சட்டத்தின் விதிகளுக்கு அமைய கைதுகள் இடம்பெற வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
- கொரோனா தொற்றுநோயின் கீழ் தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறும் அனைவருக்கு எதிராகவும் எவ்வித பாகுபாடும் இன்றி சட்டம் சமமாக அமுல்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
- கைது செய்யப்படும் நபர்களை தனிமைப்படுத்தப்பட்ட உத்தரவுகள் மற்றும் தொடர்புடைய வழிகாட்டுதல்களுக்கு அமைய கொண்டுச் செல்ல வேண்டுமென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
ஆகவே, அவசரகாலத்தில் கூட, தற்காலிக சட்டவிரோத நடவடிக்கைகளின் எதிர்மறையான தாக்கத்தை முழு சமூகமும் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதால், சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்ற சட்டத்தை அமுல்படுத்த உறுதிபூண்டுள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் சி.டி விக்ரமரத்னவிற்கு, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் ஜகத் பாலசூரிய கோரிக்கை விடுத்துள்ளார்.