யாழ்ப்பாண பல்கலை கழக வளாகத்தினுள் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் முன்பாக மாணவர்களால் ஏற்றப்பட்ட சுடரினை பல்கலைக்கழக காவலாளி காலினால் தட்டி அகற்றியுள்ளார்.
இச் செயலை பல்கலைக்கழக மாணவர்கள் வன்மையாக கண்டித்து உள்ளத்துடன் , தமது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி உள்ளனர். கண்காணிப்புக்கள் , தடைகளை தாண்டி உயிரிழந்த எம் உறவுகளுக்கு நாங்கள் உணர்வு பூர்வமாக ஏற்றிய சுடரினை காவலாளி காலினால் தட்டி அப்புறப்படுத்திய செயலானது எமது இறந்த உறவுகளை அவமதிக்கும் செயலாகும். என கவலையுடன் மாணவர்கள் தெரிவித்தனர்.
பல்கலைக்கழக வளாகத்தினுள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை செய்யவிடாது தடுக்கும் நோக்குடன் நேற்றைய தினம் முதல் , பல்கலை கழக சூழலில் இராணுவம் மற்றும் காவல்துறையினா் குவிக்கப்பட்டு, புலனாய்வாளர்களின் கண்காணிப்புக்கள் அதிகரிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் இன்றைய தினம் மதியம் மாணவர்கள் தடைகளை தாண்டி வளாகத்தினுள் உள்ள நினைவு சின்னம் முன்பாக சுடரேற்றி அஞ்சலி செலுத்தி இருந்தனர்.
அந்நிலையில் அதனை அவதானித்த பல்கலைக்கழக காவலாளி நினைவிடத்திற்கு வந்து மாணவர்களால் ஏற்றப்பட்ட சுடரினை காலினால் தட்டி அவ்விடத்திலிருந்து அகற்றியுள்ளார்.