கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் வைரஸ் தொற்று இருந்தது. கடந்த ஆண்டு நினைவு கூர்தலை தனிமைப்படுத்தல் சட்டங்களை முன்வைத்து அரசாங்கம் நெருக்கடிக்கு உள்ளாக்கியது. இந்த ஆண்டும் அவ்வாறான நிலைமைகள் உண்டு என்பதை ஊகிப்பதற்கு அதிகம் அரசியல் அறிவு தேவையில்லை. அரசாங்கம் ஒன்றில்பயங்கரவாதத்தடைச்சட்டம் அல்லது தனிமைப்படுத்தல் சட்டத்தினூடாக நிலைமைகளைக் கையாளும் என்பது கடந்த ஆண்டே தெளிவாகத் தெரிந்தது. எனவே நினைவு கூர்தலை அனுஷ்டிக்க இரண்டு வழிகள்தான்இருந்தன.ஒன்று அதை மக்கள் மயப்படுத்துவது. இரண்டு மெய்நிகர் வெளியில் செய்வது. இதை குறித்தும் கடந்த ஆண்டிலும் நான் எழுதினேன் இந்த ஆண்டும் எழுதினேன்.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட யாருமே முன்கூட்டியே சிந்தித்திருக்கவில்லைஎன்பதைத்தான் மே18 நிரூபித்திருக்கிறது. ஜெனிவாகூட்டத் தொடரையோட்டி எப்படி ஆண்டின் தொடக்கத்தில் சிந்திக்கபடுமோ அவ்வாறு நினைவுகூர்தல் குறித்தும் சில கிழமைகளுக்கு முன்னர்தான் சிந்திக்கப்பட்டதா?
அரசாங்கம் ஏதோ ஒரு சட்டத்தைத்தான் முன்னிறுத்தும். அந்தசட்டத்துக்குள் எப்படி நுட்பமாக இடைவெளிகளை கண்டுபிடிக்கலாம் என்று சிந்தித்த தமிழ் வழக்கறிஞர்கள் சட்ட மறுப்பாக போராட துணியவில்லை.தமிழ்மக்களின் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்துக்கு கறுப்பு உடுப்போடு போய், ஒரு தனி அறைக்குள் ஒரு மேசையில் சிவப்பு மஞ்சள் கொடியை விரித்து விட்டு,அதைச் சுற்றி நின்று படம் எடுத்து, அந்த படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார்கள்.அது தவிர அவர்களிடம் வேறு எந்த எதிர்ப்பரசியல் ஒழுக்கமும் இல்லையா?. அவ்வாறு சட்டமறுப்பாக போராட முடியாதவர்கள் அதை மக்கள் மயப்படுத்துவதைப் பற்றியாவது யோசித்திருக்க வேண்டும்.அதையும் செய்யவில்லை. முடிவில் எல்லாருக்கும் இருக்கிறதே ஒரு சூம். அந்த சூமில் விளக்கேற்றி நினைவு கூர்ந்திருக்கிறார்கள்.
அதனால் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் அதிகம் மக்கள் பயப்படாத ஒரு நினைவு கூர்தலே நடந்திருக்கிறது. இதுவிடயத்தில் ஒரு பொது ஏற்பாட்டுக் குழு இயங்குகிறது. ஆனால் அப்பொது ஏற்பாட்டுக்குழு சமூகத்தின் எல்லாத் தரப்புகளையும் உள்ளடக்கிய எல்லா மாவட்டங்களையும் உள்ளடக்கிய வெளிப்படைத்தன்மை மிக்க ஒரு பொதுக்குழுவாக இருக்கிறதா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் உண்டு. .நினைவு கூர்தலை எப்படி மக்கள் மயப்படுத்துவது என்று பொது ஏற்பாட்டுக்குழு பொருத்தமான விதங்களில் முன்கூட்டியே திட்டமிட்டிருக்கவில்லை.
அப்படிதிட்டமிடுவது என்று சொன்னால் அதனை அவர்கள் கடந்த ஆண்டில் இடம் பெற்ற நினைவு கூர்தலை உடனடுத்து சிந்திக்கத் தொடங்கி இருந்திருக்க வேண்டும். அதற்குரிய சந்திப்புக்களை முன்கூட்டியே செய்திருக்க வேண்டும். அதுபோலவே அரசியல் கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் முன்கூட்டியே சிந்தித்திருக்கவில்லை.
அரசாங்கம் இது விடயத்தில் மிகவும் தந்திரமாகவும் புத்திசாலித்தனமாகவும் நடந்திருக்கிறது. பெருந்தொர்றுச்சூழலை கையில் எடுத்தது புதுக்குடியிருப்பு கொத்தனியை காரணம் காட்டி அரசாங்கம் அந்தப் பகுதியை முடக்கியது. பெருந்தொற்று நோயினால் ஏற்பட்டிருக்கும் சமூகப் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து சிங்களமக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்கு ஏதோ ஒரு காரணத்தை கூறி நினைவு கூர்தலைத்தடுக்கவேண்டிய தேவை அரசாங்கத்திற்குஉண்டு.அரசாங்கம் நினைவு கூர்தலைப் பெருமெடுப்பில் அனுமதிக்கும் என்று எதிர்பார்க்கக் கூடிய ஓர் அரசியற்சூழல் நாட்டில் கடந்த ஆண்டு முழுவதிலும் கிடையாது.
நீதிமன்றம் நிபந்தனைகளோடு அனுமதி வழங்கினாலும் கூடபெருந்திரளாக ஆயிரக்கணக்கில் அங்கே மக்களைத் திரட்டியிருக்க முடியாது.
எனவே நோய்த் தொற்றுச் சூழலுக்குள் நினைவு கூர்தலை ஒன்றில் மக்கள் மயப்படுத்த வேண்டும் அல்லது மெய்நிகர் வெளியில் அனுஷ்டிக்க வேண்டும். அவ்வாறு மக்கள்மையப்படுத்துவது குறித்து பொது ஏற்பாட்டுகுழுவிடம் ஏதும் பொருத்தமான செயல்பூர்வதரிசனங்கள் திட்டங்கள் இருந்தனவா?
ஆனால் நான்கு ஆயர்கள் கூட்டாக விட்ட ஓர் அறிக்கையானது நினைவு கூர்தலை சிறிதளவுக்காவது நிறுவனமயபடுத்தியது. கத்தோலிக்க திருச்சபையின் வளாகங்களில் விளக்குகள் பெருமளவு ஏற்றப்பட்டன. ஆலயங்களில் மணிகள் ஒலிக்கப்பட்டன.அதற்கு முழுக்க முழுக்க காரணம் கத்தோலிக்கதிருச்சபையின் மேய்ப்பர்களாக இருக்கும் ஆயர்கள் நால்வரும் அது விடயத்தில் முன்கூட்டியே முடிவெடுத்து அறிவுறுத்தல்களை வழங்கி இருந்தமை தான். இது எதைக்காட்டுகிறது? ஏற்கனவே எனது கட்டுரைகளில் நான் எழுதி இருப்பது போல இப்போதிருக்கும் நிலைமைகளில் மூன்று நிறுவனங்கள்தான் நினைவு கூர்தலை மக்கள் மயப்படுத்தலாம். முதலாவது மத நிறுவனங்கள். இரண்டாவது அரசியல் கட்சிகள். மூன்றாவது மாணவ அமைப்புகள். இதுவிடயத்தில் மத நிறுவனங்கள் குறிப்பாக கத்தோலிக்க திருச்சபை மட்டும்தான் நிறுவனரீதியான முடிவு எடுத்தது. அந்த நிறுவனத்தின் தலைவர்கள் அது குறித்து முன்கூட்டியே அறிவுறுத்தியிருந்தார்கள்.
எனவே நினைவு கூர்தலை மக்கள் மயப்படுத்துவது என்றால் அதை முதலில் நிறுவனமயப்படுத்தி சிந்திக்க வேண்டும் என்பதை இது தெளிவாக காட்டுகிறது. கத்தோலிக்க திருச்சபை அளவுக்கு இந்துக்கோவில்கள் நிறுவனமயப்பட்டிருக்கவில்லையா? அல்லது இருக்கின்ற நிறுவனங்களை இதுவிடயத்தில் ஒருங்கிணைப்பதற்கு யாரும் முயற்சிக்கவில்லையா?
நினைவுகூர்தலுக்கு சில கிழமைகளுக்கு முன்பு கத்தோலிக்க திருச்சபையின் குரு முதல்வர் ஒருவர் அங்கிலிக்கன் திருச்சபை போதகர் ஒருவர் இவர்களோடு நல்லை சிவகுரு ஆதீனத்தின் முதல்வர் ஆகியோர் யாழ்ஊடகஅமையத்தில் ஒரு ஊடகச்சந்திப்பை நடத்தினார்கள். அவர்கள் நினைவு கூர்தலுக்கான பொது ஏற்பாட்டு குழுவை பிரதிநிதித்துவப்படுத்தியது போல அச்சந்திப்பில் தோன்றியது. ஆனால் அவ்வாறல்ல என்பதைத்தான் மே 18நிரூபித்திருக்கிறது.
எல்லா மத நிறுவனங்களும் பொருத்தமான விதங்களில் வினைத்திறன் மிக்க விதங்களில் ஒருங்கிணைக்க படவில்லை. நினைவுகூர்தலை நிறுவனமயப்படுத்தி சிந்தித்தால்தான் அதை அடுத்த கட்டமாக மக்கள் மயப்படுத்த முடியும் குறைந்தபட்சம் மத நிறுவனங்கள் எல்லாம் ஒன்றிணைந்து எல்லா ஆலயங்களிலும் மணிகளை ஒலிக்கவைத்திருக்கலாம்.எல்லா மத நிறுவனங்களிலும் சுட்டிகளை எற்றியிருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யப்பட இல்லை. கத்தோலிக்க திருச்சபையின் வளாகங்களில் சுடர்கள் ஏற்றப்பட்டன; ஆலயங்களில் மணிகள் ஒலிக்கவிடப்பட்டன. ஆனால் இந்து ஆலயங்களில் அவ்வாறு பரவலாக செய்யப்பட இல்லை. கிறிஸ்தவத்தின் ஏனைய பிரிவுகளும் அதை அதிகம் பின்பற்றியதாக தெரியவில்லை. சிவகுரு ஆதீனத்தின் முதல்வர் தனி ஒருவராக முள்ளிவாய்க்காலில் ஒரு சுடரைஎட்டியுள்ளார்.
அது சிவாஜிலிங்கத்தின் பாணி. சிவாஜிலிங்கத்திற்கும் சிவகுரு ஆதீனத்துக்கும் வந்த துணிச்சல் ஏன் மற்றவர்களுக்கு வரவில்லை என்பது இங்கு விவாதப் பொருள் அல்ல. இது சில துணிச்சலான நபர்களின் வீரசாகச வேலை மட்டும் அல்ல அதற்கும் அப்பால் அதனை நிறுவனயப்படுத்த வேண்டும்.அதன்மூலம் மக்கள் மயப்படுத்தவேண்டும்.ஆனால் அவ்வாறு மக்கள் மயப்படுத்துவதுயாருடைய பொறுப்பு?
முதலாவதாக அதுபொது ஏற்பாட்டுக்குழுவின் பொறுப்பு. குறைந்தபட்சம் கடந்த ஆண்டில் கிடைத்த அனுபவத்தை வைத்துக்கொண்டு இந்த ஆண்டிலாவது அதை முன்கூட்டியே திட்டமிட்டிருந்திருக்கவேண்டும். இரண்டாவதாக அரசியல் கட்சிகள் அதை செய்திருந்திருக்க வேண்டும்.ஆனால் இரண்டு தரப்புமே அதை செய்திருக்கவில்லை என்பதைத்தான் அதிக மக்கள் பயப்படாத நினைவுகூர்தல் நிரூபித்திருக்கிறது.
முதலாவதாக பொதுக்ஏற்பாட்டு குழுவானது நினைவுகூர்தலை மக்கள் மயப்படுத்துவதற்கான எவ்வாறான திட்டங்களை முன்வைத்திருந்தது என்ற கேள்வி இங்கு முக்கியமானது. அந்த ஏற்பாட்டுக் குழு சமூகத்தின் எல்லாப்பிரிவினரையும் உள்ளடக்கிய மாவட்டங்களையும் உள்ளடக்கிய ஒரு பொது ஏற்பாட்டு குழுவாக இருக்கிறதா என்பதையும் வெளிப்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் அது எத்தனை தடவைகள் எங்கே கூடியதுஎன்பதையும் வெளிப்படுத்த வேண்டும். நினைவு கூர்தல் தொடர்பான முடிவுகள் எங்கே யாரால் எடுக்கப்படுகின்றன? அவை பொது முடிவுகளாக எடுக்கப்படுகின்றனவா?அல்லது சில தனிநபர்களால் எடுக்கப்படுகின்றனவா என்பதை ஏற்பாட்டுக்குழு தெளிவுபடுத்த வேண்டும். ஒரு நினைவுக்கல்லை நடுவதற்கான முடிவை யார் எடுத்தது? எந்த அடிப்படையில் எடுத்தது? அந்த நினைவுக் கல்லில் என்னென்ன வாசகங்கள் இருக்க வேண்டும் என்பதனை யார் தீர்மானித்தது? முள்ளிவாய்க்கால் பிரகடனத்தை யார் தீர்மானித்தது? போன்றவற்றை ஏற்பாட்டுக்குழு தெளிவுபடுத்த வேண்டும்.
இரண்டாவதாக கட்சிகள்.கட்சிகளிடம் பொருத்தமான தரிசனங்ள்கிடையாது.ஒவ்வொரு கட்சியும் தன்பாட்டில் நினைவுகூர்நதிருப்பதாகவே தெரிகிறது. இதுவிடயத்தில் கட்சிகளுக்கிடையே ஒருங்கிணைந்த செயல்பாடு எதுவும் இருக்கவில்லை. ஒரே கட்சிக்குள்ளேயே ஒவ்வொரு அரசியல்வாதியும் தனிப்பட்ட முறையில் விளக்குகளைஏற்ருவதில் ஆர்வம் காட்டுவதாகத் தெரிகிறது.அதை ஒருகூட்டுச் செயற்பாடாக செய்ய கட்சிகளிடம் எந்தவிதமான ஒரு திட்டமும் இருப்பதாகத் தெரியவில்லை. நினைவுகூர்தல் முதலாவதாக, ஒரு கூடுச்செயற்பாடு. தமிழ்ச் சமூகத்தில் ஒப்பீட்டளவில் நிறுவனங்களாக காட்சியளிக்கும் கட்சிகள் நினைத்திருந்தால் தமது கிராம மட்டகிளைகளுக்கு ஊடாக அதை மக்கள் மயப்படுத்துவாதற்கு எதையாவது செய்திருந்திருக்கலாம். ஆனால் கட்சிகள் அப்படி எதையும் செய்யவில்லை.
இது தொடர்பில் பொது ஏற்பாட்டுக் குழு கட்சிகளை அணுகியதா? கட்சிகளுக்கு ஏதாவது வழி வரைபடத்தை கொடுத்ததா? அவ்வாறு கொடுத்த பின்னரும் கட்சிகள் அதை செயல்படுத்தவில்லையா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். கட்சிகள் பொது ஏற்பாட்டுக் குழுவோடும் இல்லை தங்களுக்கு இடையிலும் ஐக்கியமாக இல்லை. கட்சிகளுக்குள்ளும் ஒரு பொது ஏற்பாடு இல்லை.சூமில் நினைவுகூர்வதற்கு அதிகம் கஷ்டப்பட தேவையில்லை.அது ஒரு தொழில்நுட்பஏற்பாடு. அதைஅனைத்துலக அளவில் பரந்தகன்ற தளத்தில் செய்யமுடியும்.அதைஅதிகபட்சம் அனைத்துலக அளவில் விரிவுபடுத்தலாம் என்பது மெய்நிகர் வெளியிலுள்ள வரப்பிரசாதம். அதைக்கட்சிகள் ஓரளவுக்கு முயற்சித்ததாக தெரிகிறது.
எனினும்,மெய்நிகர்வெளியில் நினைவுகூர்தல் ஒழுங்குபடுத்துவது என்பது தனியே மே 18ஆம் திகதி விளக்கை ஏற்றி உரை நிகழ்த்துவது மட்டும் அல்ல.அதுஅதைவிட ஆழமானது. இனப்படுகொலையை நினைவுகூர்வது என்பது இனப்படுகொலைக்கு எதிரான நீதியைப் பெறுவதற்கான ஒரு போராட்டத்தின் பிரிக்கப்படவியலாத பகுதிதான். எனவே நீதிக்கானபோராட்டத்தின் ஒரு பகுதியாக நினைவுகூர்தலை வடிவமைக்க வேண்டும். அதன்பொருட்டு ஈழத்தமிழ்ச் சமூகத்தை மட்டுமல்ல பெருந்தமிழ்பரப்பில் இருக்கக் கூடிய ஆர்வமுடைய அனைவரையும் எப்படி ஒன்றிணைக்கலாம் என்று சிந்திக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் முதலில் மெய்நிகர் வெளியில் ஒரு இனப்படுகொலைஅருங்காட்சியகத்தை உருவாக்க வேண்டும். இதுவிடயத்தில் கட்சிகள் எந்தளவுக்கு ஆர்வமாக உள்ளன ?அப்படி ஆர்வமாக இருந்திருந்தால் நினைவு கூர்தலைசூமிற்குள் மட்டும் சுருக்கி இருக்க தேவையில்லை. எனவே கூட்டிக்கழித்துப் பார்த்தால் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ஒரு பெரும் தொற்று நோய்க் காலத்தில் தாயகத்தில் நினைவுகூர்தலை பெருமளவிற்கு மக்கள் மயப்படுத்தமுடியவில்லை.போனஆண்டை விட அதிகளவில் மக்கள் மயப்படுத்தத்தவறியதற்கான பொறுப்பை பொதுஏற்பாட்டுக்குழுவும் கட்சிகளும் ஏற்கவேண்டும்.
2 comments
மெய்நிகர் அருங்காட்சியம் தமிழ் இன அழிப்பை நினைவில் வைக்க உதவக் கூடியது
தமிழ் தகவல் மையம் லண்டன் மற்றும் பெர்லினில் யூத சமூகத்தால் நிறுவப்பட்ட “ஹோலோகாஸ்ட் அருங்காட்சியகங்களை” ஒத்த ஒரு அருங்காட்சியகத்தை லண்டன் அல்லது கனடாவில் நிறுவ முயற்சிக்கிறது.
https://ticonline.org/freepublications.php